Lankamuslim.org

லிபியாவில் இன்று பொதுத் தேர்தல்

leave a comment »

BBC Tamil: லிபியாவில் மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சுதந்திரமாக வாக்களிக்கின்ற முதல் தேர்தல் இதுதான் என்று சொல்லலாம். சென்ற வருடம் நேட்டோ சர்வதேச படைகளின் ஒத்துழைப்புடன் இந்நாட்டில் நடந்த கிளர்ச்சியில் முவம்மர் கடாஃபி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதை அடுத்து நடக்கின்ற இந்த தேர்தலில் மக்கள் பெருமளவில் திரண்டு வாக்களித்தனர்.

இந்த தேர்தலின் மூலம் தேசிய ஆட்சி மன்றம் ஒன்றைத் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள், அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் தேசிய மன்றம் நாட்டின் பிரதமர் ஒருவரையும் அமைச்சரவை ஒன்றையும் தெரிவுசெய்யும்.

வாக்குப் பதிவிலிருந்து இரண்டு வார காலத்தில் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, தாவாக்கள் தீர்க்கப்பட்டு, புதிய தேசிய மன்றம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேசிய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்து முப்பது நாட்களில் நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் அவர் தமது அமைச்சரவையைத் தெரிவுசெய்வார் என்று தெரிகிறது.

அரசியல் சாசன வரைவுக் குழு

லிபியாவுக்கான புதிய அரசியல் சாசனத்தை வரைவதற்கான குழுவின் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம் இந்த புதிய தேசிய மன்றத்துக்கு இருக்காது என் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் தேசிய இடைக்கால ஆட்சி மன்றம் அறிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தை உருவாக்கும் அதிகாரமும் இந்த தேசிய ஆட்சி மன்றத்துக்கு இருக்கும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 200 உறுப்பினர்களை கொண்டதாக அமையப்போகும் தேசிய ஆட்சி மன்றத்துக்கு அந்த அதிகாரம் இராது என்பதை தேசிய இடைக்கால ஆட்சி மன்றத்தின்

சார்பகப் பேசவல்ல சலா தர்ஹூப் உறுதி செய்துள்ளார்.

அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணியைச் செய்யவுள்ள குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் தகுதிகளை வரையறுக்கும் வேலையை மட்டுமே ஹேசிய காங்கிரஸ் செய்யும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியல் சாசனத்தை உருவாக்கும் வேலையைச் செய்யவுள்ள வரைவுக் குழுவின் அறுபது உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தர்ஹூப் பிபிசியிடம் கூறினார்.

பிராந்தியப் பிளவுகளும் வன்முறையும்

மும்முரத்துடன் வாக்குப் பதிவு நடந்தாலும், வன்முறையும், பல்வேறு பிராந்தியங்களிடையே ஆழமான பிளவும் முரண்பாடுகளும் இன்றைய தேர்தலில் காணப்படவே செய்கிறது.

உருவாக்கப்படும் தேசிய ஆட்சி மன்றத்தில் எண்ணெய் வளம்மிக்க கிழக்கு லிபியாவுக்கு போதிய அங்கீகாரம் இருக்காது என அப்பிராந்திய மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

தேசிய ஆட்சி மன்றத்தின் 200 ஆசனங்களில் 60 இடங்கள் மட்டுமே கிழக்கு பிராந்தியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

100 இடங்கள் மேற்குப் பிராந்தியத்துக்கும், 40 இடங்கள் தென் பிராந்தியத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பங்காஸி அருகே நேற்று ஹெலிகாப்டர் ஒன்றின் மீது துப்பாக்கிதாரி தாக்கியதில் தேர்தல் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கிழக்கு லிபியாவுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வேண்டும் என்று கோரும் ஆர்வலர்கள் பங்காஸி நகரின் வாக்குச் சாவடி ஒன்றை தாக்கியதோடு வாக்குச் சீட்டுக்களை வாக்குப் பெட்டிகளையும் பறித்து சென்றனர்.

வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறை காரணமாய் சில் இடங்களில் வாக்குப் பதிவு இடைநிறுத்தப்பட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வாக்குப் பதிவு இடைநிறுத்தப்படவில்லை என தேர்தல் துணை ஆணையாளரை மேற்கோள்காட்டி லிபியாவின் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

Written by lankamuslim

ஜூலை 7, 2012 இல் 9:52 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக