Lankamuslim.org

கண்டி : குற்றவாளிகள் தப்பவே முடியாது என்றாராம் பிரதமர் !!

leave a comment »

ranil-wikramasinghe“கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸிலின் உறுப்பினர்கள் அலரிமாளிகையில் வைத்து பிரதமரைச் சந்தித்து, அண்மையில் இடம்பெற்ற கண்டி கலவரம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அதில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கையில், “கண்டி, கலவரத்தின்போது பிரச்சினையைத் தடுக்காது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பொலிஸாரின் செயற்பாடு மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நட்டஈடு வழங்காமல் இருப்பதற்கான எமது அதிருப்தியைப் பிரதமருக்குத் தெரிவித்தோம்.

அத்தோடு, நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனக்குரோத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இதுவரை அரசுகள் நட்டஈடு வழங்காமல் இருப்பது தொடர்பில் எமது கவலையையும் தெரிவித்திருந்தோம்.

இதன்போது, அவ்விடத்தில் வைத்தே மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கண்டி கலவரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நட்டஈடு வழங்குமாறு பணித்தார்.

மேலும், நல்லாட்சி அரசில் இதுபோன்ற இனவாதச் சம்பவம் இடம்பெற்றதையிட்டு கவலை வெளியிட்டபிரதமர், இந்தச் செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைவருக்கெதிராகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதேநேரம், 1983 இனக்கலவரத்தின்போது வயது முதிர்ந்தவர்களே தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்றும், கண்டி, திகன தாக்குதல் சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 15 – 35 வயதுக்கிடைப்பட்டவர்களே என்றும், சமூக வலைத்தளங்களே இந்த வன்முறைக்கு பிரதான காரணமாக இருந்ததால் அவற்றை ஒருவாரத்துக்கு தடைசெய்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.

 

Written by lankamuslim

மார்ச் 18, 2018 இல் 12:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக