Lankamuslim.org

பிராந்திய , பூகோள மேலாதிக்க அரசியலும் யெமன் முஸ்லிம் தேசத்தின் மனிதப் பேரவலமும் !!

leave a comment »

எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி) 
qawawqaயெமென் என்ற முஸ்லிம் தேசம்   உலகிற்கு பல தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களை வழங்கிய தேசம் , பூகோள ரீதியில் தென்மேற்கு ஆசியாவில் அமைத்துள்ள இந்த நாடு . அதன் வடக்கு எல்லையில் சவூதி அரேபியாவையும் , கிழக்கு  எல்லையில் ஓமானையும்  தெற்கு  எல்லையில் அரபியன்  கடலையும்
  , வடமேற்கு  எல்லையில் செங்கடலையும் எல்லைகளாக கொண்டுள்ள , சுமார்  28 மில்லியன் மக்கள் வாழும் ஓர் ஏழ்மையான நாடு  .

யெமனில்  இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .இவர்களில்  பசியினாலும்  ,பட்டினியாலும் மரணிக்கும் குழந்தைகள்  அதிக எண்ணிக்கையில் உள்ளதாக பல்வேறு தகவல்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிடுகின்றன ,  2015 மார்ச் தொடக்கம் இன்றுவரையுள்ள மூன்று ஆண்டுகளில்  சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.சுமார் 60,000 பேர் காயமடைந்துள்ளனர்  இவர்களில் பெரும்பாலானவர்கள்  2017-2018 காலப்பகுதியில் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர்  என மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள்  குறிப்பிடுகின்றன , மரணித்தவர்கள் போக விசேடமாக  தற்போது  சுமார்  8.4 மில்லியன் மக்கள் உணவு இன்றி நேரடி பட்டினி மற்றும் பட்டினி காரணமாக மரண அச்சறுத்தலை   எதிர்கொண்டுவருகின்றனர் , சுமார் 17.8 மில்லியன் மக்கள் தங்கள்  அடுத்தவேளை   உணவுக்கு  கூட வழியில்லாமல் வறுமையின்  கொடிய பிடியில் சிக்கியுள்ளனர் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடக்கம்   ஐநா வரை  எச்சரிக்கை  அறிக்கைகளை  வெளியிட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு மத்தியகிழக்கின்  அரபு முஸ்லிம் நாடுகளில்    ஆரம்பித்த மக்கள் எழுச்சி போராட்டங்கள் யெமனிலும் வீரியம் பெற்றபோது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அப்துல்லாஹ் அல் ஸாலிஹ் அழுத்தங்களின் காரணமாக பல்வேறு பட்ட அரசியல்  சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டு அல் ஹாதி அல்  மன்சூரி என்பவரிடம் இடைக்கால அதிகாரத்தை வழங்கிய போதிலும் பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க சக்திகளின் தலையீடு  யெமன் மக்களின் போராட்டத்தை திசை திருப்பி அழிவின் பக்கம்  கொண்டுவந்து சேர்ந்துள்ளது என்பதுதான் இந்த மக்களின் பேரிழப்புக்களுக்கான பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பாக தூய்மையாக  ஆரம்பித்த யெமன் மக்களின் எழுச்சி  பிராந்திய ,சர்வதேச சக்கதிகளின் தலையீடு  பதவி விலகிய அப்துல்லாஹ் அல் ஸாலிஹ் இராணுவத்துள் பெற்றிருந்த செல்வாக்கு அதை பயன்படுத்த முயன்ற பிராந்திய சக்திகள் , ஈரான் ஆதரவு  கிளர்ச்சி குழுக்களின் எழுச்சி , மறுபுறத்தில் சவூதி கூட்டுப்பட்டையின் இராணுவ  நுழைவு , அல் காயிதா , இஸ்லாமியதேசம் அமைப்பு ஆகியவற்றின் நுழைவு   சவூதி கூட்டுப்பட்டையின் ஆதரவை பெற்ற இடைக்கால அதிபர் ஹாதி அல்  மன்சூரின் தரப்பில் ஏற்றப்பட்ட பிளவுகள் ஆகியனவும் யெமன் மக்களின் போராட்டத்தை திசைதிருப்பி யெமன்  தற்போது நகர்த்திக்கொண்டுவரப்பட்டுள்ள பேராபத்தான   நிலைக்கான   நேரடியாக  பங்களிப்பு செய்துள்ள காரணிகளாகும.

குறிப்பாக சுன்னாஹ் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட யெமன்  நாட்டில் ஈரானின் அரசியல் ,இராணுவ தலையீடு  மற்றும்   அமெரிக்க ஆதரவும் ஒத்துழைப்பும் பெற்ற சவூதி கூட்டுப்படைகளின் மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகள்  என்பன நிலைமையை மோசமாக்கியுள்ளது இங்கு வாழும் ஷீயாக்கள்   சைத்தீ பிரிவை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர் சுமார் 400 வரையாக சைத்தீ பழங்குடி குழுக்கள் யெமனில்  வாழந்துவருகின்றனர் , இவர்கள் ஷீயாக்களின்  பிரதான பிரிவான இமாமியா பிரிவின் பல்வேறு கோட்பாடுகளை மறுப்பவர்கள், இவர்களும் முரண்பாடான நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும் ஒப்பீட்டளவில்  ஸுன்னாஹ் முஸ்லிமக்ளுக்கு மிக நெருக்கமானவர்களாக இஸ்லாமிய அறிஞர்களால் பார்க்கப்படுகின்றார்கள். ஆக யெமனில் ஆரம்பித்த அரசியல் ,பொருளாதார சீர்திருத்தம் கோரிய  தூய்மையான மக்கள் எழுச்சி பிராந்திய ,பூகோள மேலாதிக்க சக்திகளினால் இஸ்லாமிய பிரிவுகளுக்குக்கிடையிலான இரத்தம் குடிக்கும்     போராட்டமாக  மாற்றப்பட்டுள்ளதுடன்  யெமன் முஸ்லிம் தேசத்தை  பஞ்சத்தாலும் , நோய்களினாலும் அழிந்துபோகும் தேசமாக மாற்றுவதிலும் வெற்றிபெற்றுள்ளன .

கடந்த 20 ஆண்டுகளாக உலகில் பஞ்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாடுகளான   சோமாலியாவுடனும்  தென் சூடானுடனும்  புதிதாக   யெமனும் இணைந்து கொள்ளும் அவல நிலை விரைவில் ஏற்படவுள்ளதாக பல மனித உரிமை அமைப்புக்கள் கூறிவந்த நிலையில்  கடந்த வாரம் (23 திகதி ) ஐநாவும் இது பற்றி  எச்சரிக்கை  விடுத்துள்ளது.

யெமன்  மக்கள் விரையில் பஞ்சநிலைக்குல்  சிக்கிவிடும் அபாயம்  காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானம், உடனடி நிவாரணம் போன்ற விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் கடந்த   செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார்  மேலும் யுத்தத்துக்கு  மத்தியில் இடம்பெயர்ந்து திரியும் சுமார் 14 மில்லியன் யெமன் நாட்டு மக்கள் பாரிய பஞ்சமொன்றை சந்திக்கும் அபாயம் காணப்படுவதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.  குறித்த மக்கள் உணவுத்தட்டுப்பாட்டை மட்டுமன்றி விஷேடமாக குழந்தைகளும் முதியவர்களும் கொலரா  போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்   .

இதேவேளை யெமனின் தாக்குதல்களில் ஈடுபடும் சக்திகளினால் அதிகமாக  “சர்வதேச மனிதாபிமான சட்டங்கள்  மீறப்படுவதால் பொதுமக்கள் அதிகமாக இழப்புக்களை  எதிர்கொள்வதாக பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது குறிப்பாக தற்போது   பொது மக்களின் இழப்புக்கு சவூதி தலைமையிலான கூட்டு படை மீதே  அதிகமான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக சவூதி நாட்டின் முடிக்குரிய அரச குமாரர் பின் ஸல்மான் சவூதியின்  பாதுகாப்பு அமைச்சராக  பணியாற்றுகிறார், என்பதுடன்  யெமன் மீதான போரியல் தாக்குதல் திட்டங்களின் கட்டமைப்பாளராகவும் இவரே கருதப்படுகிறார்,  2014 இல் ஈரானின் ஆதரவை கொண்ட ஹூதி படை யெமனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்தது இதை தொடர்ந்து அமெரிக்க ஆலோசனையின்  பேரில் அரச குமாரர் பின் ஸல்மானால்  கட்டமைக்கப்பட்ட சவூதி கூட்டுப்படை  தாக்குதல்களை  ஆரம்பத்தன இந்த கட்டமைப்பில் முக்கிய பாத்திரத்தை சவூதியும் , துபாயும் , எகிப்தும் வகித்தன அல்லது வகித்து வருகின்றன சுமார் மூன்று  ஆண்டு கால யுத்தத்தில்  யெமனின் பெரும்பாலான உட்கட்டமைப்பு  சிதைக்கப்பட்டுள்ளது ,  “நமது காலத்தின் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி” என ஐநா மனித உரிமைகள் அமைப்பினால் வர்ணிக்கப்படும் அளவுக்கு யெமனும் யெமன் நாட்டுமக்களும் மிக அபாயகரமான மனித பேரவலத்தை எதிர்கொண்டுள்ளனர்.

”யெமன் தரவு திட்டம்” என்ற ஒரு   சுயாதீனமான கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள தகவலின் படி மார்ச் 26, 2015 முதல் மார்ச் 25, 2018   வரையான  இடைப்பட்ட காலப்பகுதியில்  சவூதி கூட்டுப்படையினால் 16,749 விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்பட்டுள்ளது அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 15 குண்டுகள் போடப்பட்டுள்ளன  ஆனால் அந்த வான் தாக்குதல்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குண்டுகள் , அல்லது 31% வீதமான குண்டுகள்   இராணுவ இலக்குகள் அல்லாத இடங்களை இலக்கு வைத்துள்ளன அதாவது பொது மக்கள் மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளது . இது பொது மக்கள் கொல்லப்படுவதத்திற்கு பிரதான காரணமாகியுள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது ,    .இது பற்றி குறிப்பிடும் சில யெமன் நாட்டு செயல்பாட்டாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் எமது கட்டமைப்பு  எடுப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டது பசி ,  பஞ்சம் ,பட்டினி  மரணம்  என்பன எங்கும் பரவியுள்ளது என குறிப்பிடுகின்றனர் .

கிடைக்கும் தகவல்களில் படி பார்த்தல் யெமனின் மக்கட்தொகையில் 75% மாணவர்கள் அதாவது – 22.2 மில்லியன் மக்கள் – உடனடியாக  மனிதாபிமான உதவி தேவையுள்ளவர்களாக உள்ளனர் , இதில் 11.3 மில்லியன் மக்கள் மிக மோசமாக  பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிர்வாழ அவசர, உடனடி உதவி தேவைப்படுபவர்களாக மாறியுள்ளனர்   இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது ,   சுமார் 17.8 மில்லியன் மக்கள் தங்கள் அடுத்தவேலை  உணவுக்கு  கூட வழியில்லாமல் வறுமையில் கொடிய பிடியில் சிக்கியுள்ளார் ,சுமார்  8.4 மில்லியன் மக்கள் உணவு இன்றி நேரடி பட்டினியை  எதிர்கொண்டுள்ளனர்  ஐந்து வயதிற்கு உட்பட்ட சுமார்  400,000 குழந்தைகளின் வாழ்வை  மிக கடுமையான ஊட்டக்குறைபாடு  அச்சுறுத்துகின்றது

மத்திய கிழக்கில் ஒரு புறம் ஈரான் தனது செல்வாக்கை பிராந்தியத்தில் வலுவாக கட்டமைக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது ,அதில் முஸ்லிம்களை ஷீயாக்களாக மாற்றுதல் ,  ஷியாக்களை இமாமியாக்களாக  மாற்றுதல் என சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது மறுபுறம் அமெரிக்காவால் வழிநடாத்தப்படும் சவூதி முடிக்குரிய அரச குமாரன்  பின் ஸல்மானின்   வழிநடத்தலில்  சவூதி மட்டுமல்ல பல முஸ்லிம் தேசங்கள் மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டுவருகின்றன,  சவூதியையும் ,முஸ்லிம் உம்மாவையும் ,இஸ்லாத்தையும் பாதுகாக்க  அரச குமாரன்  பின் ஸல்மானை அதிகாரத்தில் இருந்து ஓரம் கட்டுவது சவூதி மன்னர் குடும்பத்திற்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருவதாக பல இஸ்லாமிய அறிஞர்களும்   கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.  முஸ்லிம் உம்மாவை பிளவுபடுத்தி அது  முன்னோக்கி நகராமல் வைத்துக்கொள்வது  சயோனிச மேற்கின் தவிர்க்கமுடியாத கடமை   என்றால்   முஸ்லிம் நாடுகளில் சர்வாதிகாரிகளை பாதுகாப்பது அவர்களுக்கு தவிர்க்கமுடியாத தேவை, பூகோள  மேலாதிக்க சக்திகள் இஸ்லாமிய எழுச்சியை  அடக்கியொடுக்க இந்த அரபுலக சர்வாதிகாரிகளைதான்  நம்பியிருக்கின்றார்கள் , அவர்களில் உள்ளவர்கள்தான் சவூதியின்  பின் ஸல்மானும் , எகிப்தின் அப்துல்பத்தாஹ் சிஷியும் , துபாயின் பின் சயீதும்,  இதைத்தான் அறிஞர் முஹம்மத் முக்தார் அல் ஷன்கீதி  இப்படி குறிப்பிட்டிருந்தார் றியாத், கெய்ரோ, டமஸ்கஸ் மற்றும் இஸ்லாமிய , அரபு  நகரங்கள், மக்களை அடிமைப்படுத்தும் , எதிரிகளுக்கு விசுவாசம் காட்டும், அப்பாவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் படுகொலை செய்யும், சிறையில் அடைக்கும் மிலேச்சத்தனமான சர்வாதிகாரிகள் மற்றும் அடிமை முகவர்களிடம் இருந்து மீட்கப்படாத வரை அல்-குத்ஸை இழிவான சயோனிஸ சக்திகளிடம் இருந்து மீட்கமுடியாது என்றார் இதுதான் யதார்த்தமாகும்  பின் ஸல்மானும் , எகிப்தின் அப்துல்பத்தாஹ் சிஷியும் , துபாயின் பின் சயீதும், சிரியாவின் பஷார் அல் அசத்தும் அதிகாரத்தில் நீடித்தால் இழப்புகளை தவிர வேறு எதையும் முஸ்லிம்  உம்மா பெற்றுக்கொள்ளாது என்பது நடைமுறை அரசியல் யதார்த்தமாகும் .

Written by lankamuslim

நவம்பர் 5, 2018 இல் 4:41 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக