Lankamuslim.org

‘ஜனாதிபதியின் அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தை நாடுவோம்’-UNP, JVP, TNA

leave a comment »

supremecourtUNP, JVP, TNA ஆகிய கட்சிகள், பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தனித்தனியாக அறிவித்துள்ளன.

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“19வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.”

இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது எனவும் நான் மட்டுமல்ல இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்..

மங்கள சமரவீர

பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு அலரி மாளிகையில், நடந்த கூட்டத்துக்குப் பின்னர், ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு தகவல் வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.“நிச்சயம் நாங்கள் நீதிமன்றத்தில் இதனை சவாலுக்கு உட்படுத்துவோம்.

இதன் விளைவாக ஜனாதிபதிக்கு எதிராக ஒரு குற்றவியல் பிரேரணையையும் கொண்டு வருவோம். ஏனென்றால் அவரால் நாட்டுக்கு ஆபத்து. நாட்டின் ஜனநாயக மரபுகளுக்கு ஆபத்து உள்ளது.

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது.ஆனால், இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல். எனவே, இந்தக் கலைப்புக்கு எதிராக சவால் விட வேண்டிய தேவை உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித் பி பெரேரா

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. அஜித் பி பெரேரா பேசினார். ”பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது. சட்டத்திற்கு முரணான எந்தவொரு உத்தரவையும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார். ”இரத்தம் சிந்தாத வகையில் இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு நாம் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் கேட்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

JVP

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தனித்தனியாக அறிவித்துள்ளன.

மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்த பாராளுமன்றம்

கலைக்கப்பட்டுள்ள எட்டாவது பாராளுமன்றம் மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்தது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி எட்டாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, 13 போனஸ் ஆசனங்களுடன் 106 ஆசனங்களைக் கைப்பற்றியது.

Written by lankamuslim

நவம்பர் 10, 2018 இல் 10:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக