Lankamuslim.org

முஸ்லிம்களின் வர்த்தகநிலையங்கள் தீக்கிரையாவது தொடர்கதையா ?

leave a comment »

fireநாட்டில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஞாயிறன்று இரவு பாணந்துறை நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீக்கிரையான சம்பவம் ஊடகங்களில் கூடுதலான அவதானத்தை பெறுவதற்கு தவறியுள்ளது.

சிறுபான்மை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்கள் கடந்த சில வருட காலமாக இவ்வாறு தீக்கிரையாகுவது இலங்கையில் ஒரு வழக்கமாக மாறி வருகிறது. பெஷன் பக், ஹமீடியா, கூல் பிலனட், லாஸ்ட் சான்ஸ் உட்பட முஸ்லிம்களுக்குரிய பத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் தென்னிலங்கையில் பல்வேறு இடங்களில் தீக்கிரையாகியுள்ளன.

பாணந்துறையில் ஏற்பட்ட தீ மின்னொழுக்கா? அல்லது நாசகார வேலையா? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாதுள்ளது. அரச பகுப்பாய்வு நிறுவனத்தின் அறிக்கையே உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

பாணந்துறை சம்பவத்துக்கு முன் ஏற்கனவே நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்களுக்குரிய வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாதுள்ளது.

பாணந்துறை சம்பவம் நடந்த அதே இரவு மாகாணசபைகள் உள்ளூராட்சி விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஸ்தலத்துக்கு விஜயம் செய்து சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணருமாறு பொலிஸாரைக் கேட்டுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா ஸ்தலத்தில் தெரிவித்த கருத்து முக்கியமானது. ‘இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே சிறந்தது. அதனை விட்டு விட்டு அரசியல் இலாபம் கருதி அல்லது காட்டிக்கொடுக்கும் நோக்குடன் சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறான செயல்களை யாராவது செய்வார்களானால் அது மன்னிக்க முடியாத பாரிய குற்றமாகும்’

அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தின்படி இங்கு நாசகார வேலை தான் நடந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. தாம் கடையை மூடி வெளியே செல்லும்போது மின்சாரத்தை முழுமையாக செயலிழக்கச் செய்துவிட்டே சென்றோம் என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வருடத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்கள் உற்சவ காலமாகும். உற்சவ கால வியாபாரத்தை இலக்காகக்கொண்டு இச் சம்பவம் இடம்பெறுகின்றதா? அப்படியானால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கதையா? என்று கேட்கவேண்டியுள்ளது. அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு பாடம் புகட்டுவதற்காக அல்லது பழி வாங்குவதற்காக இவ்வாறான செயல்கள் இடம்பெறுகின்றனவா? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

நடக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த காலங்களில் இவ்வாறாக முஸ்லிம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கடும்போக்காளர்கள் பலர் சுதந்திரமாக நடமாடும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறலாம் என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்துக்குள்ளே நிலவுகின்றது.

சமூக ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் பல செய்திகள் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போன்றுள்ளன. பெரும்பான்மை சமூகத்தின் மிகச் சிறிய குழுவொன்றே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே முஸ்லிம்கள் தாம் அயலில் வாழுகின்ற பெரும்பான்மையின சகோதரர்களோடு கலந்துரையாடி இவ்வாறான நாசகார வேலைகள் இடம்பெறுவதனை தவிர்க்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாணந்துறை சம்பவத்தின்போது தீ அணைக்கும் படையினர் வருவதற்கு ஒரு மணித்தியாலம் தாமதித்ததாக கூறப்படுகின்றது. பிரதான நகரொன்றின் மத்தியில் தீ பரவும்போது இவ்வளவு தாமதித்து தீ அணைப்பு படையினர் வந்தது ஏன்? என்பது பற்றியும் விசாரித்தறிவது அவசியமானதாகும்.

பள்ளிவாசல்கள் தொடர்பாக விசேடமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். விழிப்பாக இருந்து செயற்படுவது அவசியமாகும். பொலிஸார் இந்த விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தி நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.-நவமணி

Written by lankamuslim

நவம்பர் 29, 2018 இல் 3:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக