Lankamuslim.org

பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை வேகமாக அதிகரித்து வருகிறது. – அமெரிக்கா

பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்களிடம் விரைவில் 200 அணுகுண்டுகள் சேர்ந்துவிடக்கூடிய அபாயம் ஏற்படலாம் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிடம் தற்போது 80 முதல் 100 அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் தனது அணுகுண்டு தயாரிப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ராவல்பிண்டிக்கு அருகே தேரா கசி ககன் என்ற இடத்தில் பாகிஸ்தான், அணு ஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியம் ஹெக்சா புளூரைட் மற்றும் யுரேனியம் மெட்டல் போன்றவற்றைத் தயாரித்து வருகிறது. மேலும், அங்கு புளூட்டோனியத்தைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவியுள்ளது” என்றார்.

அமெரிக்காவின் செயற்கோள் படங்களும் பாகிஸ்தானின் அணு ஆயுத ஆராய்ச்சி பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

இது குறித்து அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த அட்மிரல் மைக் மூலன் என்பவர் கூறுகையில்,

“தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்திருப்பது அவர்களுக்குக் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுக்கும் சேர்த்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது” என்றார்.

அமெரிக்காவின் உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான யுரேனியங்களை வேகமாக உற்பத்தி செய்து வருகிறது. இதே வேகத்தில் போனால் அவர்களது அணுகுண்டு எண்ணிக்கை விரைவில் இரட்டிப்பாகி 200 என்ற எண்ணிக்கையைத் தொட்டுவிடலாம்.

ஏற்கனவே சுவாட் பகுதியில் தலிபான், அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கையில் கிடைத்துவிட கூடாது என உலகமே பிரார்த்தனை செய்து வருகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணுகுண்டு உற்பத்தியை விரிவு செய்திருப்பது கவலை அளிக்கிறது” என்றார்.

Written by lankamuslim

மே 22, 2009 இல் 3:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது