Lankamuslim.org

யாழ். மாநகர சபைக்கு சிங்கள முதல்வர்!: கனடிய ‘கீதவாணி’ வானொலியின் விஷமத்தனம்!!

கனடாவில் ஒலிபரப்பாகும் புலிகளின் பிரச்சார வானொலிகளில் ஒன்றான ‘கீதவாணி’, தனது மே 29, 2009 திகதிய காலைச்செய்தியில் மிகப்பெரிய பொய்யொன்றை அவிழ்த்துவிட்டுள்ளது. அதாவது, யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக (Mayor) அரசாங்கம் நியமிக்கப்போவதாகவும், அவர் கொழும்பில் இருந்து செயற்படுவார் என்றும், அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முன்பு யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்து, (புலிகளால் கொலைசெய்யப்பட்ட) அல்பிரட் துரையப்பாவும் அவ்வாறு நியமிக்கட்டவர் என்றும், அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டது. யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை என்பனவற்றுக்கு தேர்தல் நடாத்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டதைத் தொடர்ந்தே, கீதவாணி இந்தப் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியுள்ளது.

இந்தச்செய்தியை செவிமடுக்கும் கனடாவில் வாழ்கின்ற (புலிகளின் அபிமானத்துக்குரிய) ‘இளையோர் சமூகம்’ என்ன முடிவுக்கு வந்திருப்பார்கள்? ‘யாழ்.மாநகர சபை முதல்வர் என்பவர் மக்களால் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுபவர் அல்ல, இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர் முன்னர் யாழ்.மாகரசபை முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பாவும் அவ்வாறு நியமிக்கப்பட்டவர் தான் அத்துடன் அல்பிரட் துரையப்பாவும் ஒரு சிங்களவர் என்றபடியால்தான் அவரை இலங்கை அரசாங்கம் அப்போது முதல்வராக நியமித்தது’ என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வாழ்கின்ற ஒரு இலட்சத்து, நான்காயிரம் வாக்காளர்களை முட்டாள்களாகவும், கனடாவில் வாழ்கின்ற சுமார் இரண்டரை லட்சம் தமிழர்களை படுமுட்டாள்களாகவும் நினைத்துக்கொண்டு, கீதவாணி செய்துள்ள இந்த விஷமத்தனத்துக்கு, அதன் தீவிர புலிச்சார்பு நிலையைத்தவிர வேறு எந்தக்காரணமும் இல்லை.

வன்னி யுத்தம் நடைபெற்ற இறுதிநாட்களில் கீதவாணி செய்துவந்த பொய்ப்பிரசாரங்களுக்கும், விஷமத்தனங்களுக்கும் அளவு கணக்கே இல்லை. இந்த வானொலியின் உரிமையாளரான நடா.ராஜ்குமார் என்பவர், தினசரி மதியவேளையில் நேயர்களுடன் நடாத்தும் நேரடி உரையாடலில், புலிகளுக்கு சாதகமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, நேயர்கள் என்ற போர்வையில் புலி ஆதரவாளர்களின் அப்பட்டமான வன்செயல் கருத்துகளை ஒலிபரப்பி, கனடா வாழ் தமிழ் சமூகத்தை வன்முறை உணர்வுகளுக்கு தூண்டிவந்துள்ளார். ஒருமுறை இவர் கொடுத்த தலைப்பில் கருத்து தெரிவித்த புலி ஆதரவாளர் ஒருவர், ‘ராஜீவ் காந்தியைக் கொன்றது போல, தமிழக முதல்வர் கருணாநிதியையும் எப்பொழுதோ கொன்றிருக்க வேண்டும்’ என அப்பட்டமாகத் தெரிவித்து, கீதவாணியில் அது வெளிப்படையாக ஒலிபரப்பப்பட்டது. இது போன்ற வன்முறையை தூண்டிவிடும் கருத்துக்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா, பிள்ளையான், மகிந்த ராஜபக்ச போன்றோரைப் பற்றியும் தாராளமாக கூறப்பட்டு வந்துள்ளன.

கனடாவில் அண்மைக்காலங்களில் புலிகளால் நடாத்தப்பட்ட வீதி ஆர்ப்பாட்டங்களின் போது, பல வன்முறைச் சம்பவங்களும், சட்டமீறல் சம்பவங்களும் நடைபெற்றதற்கு, கீதவாணி வானொலியில் ராஜ்குமார் போன்றவர்களும், இன்னொரு கனடிய தமிழ் வானொலியான (இளையபாரதியின்) ‘கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்’ செய்தி வாசிக்கும் புலிகளின் மிகத்தீவிர விசுவாசியான (பருத்தித்துறையில் உள்ள இ.போ.ச பஸ் டிப்போவில் முன்பு பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய) தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவரும், செய்துவந்த புலிசார்பு வன்முறைப் பிரச்சாரங்களும் காரணமாகும். அத்துடன் புலிகளால் நடாத்தப்படும் சி.எம்.ஆர் (Canadian Multicultural Radio) வானொலியும், கனடாவில் வெளிவருகின்ற 15க்கும் அதிகமான புலி ஆதரவு இலவசப் பத்திரிகைகளும், புலிகளுக்கு ஆதரவான பொய்ச்செய்திகளை வெளியிட்டு கனடிய தமிழ்மக்களின் காதில் பூச்சுற்றி அவர்களை முட்டாள்களாக்கி வந்துள்ளன.

அண்மையில் கீதவாணி வானொலி உரிமையாளர் ராஜ்குமார், சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்ரபோல், மற்றும் இலங்கை, இந்திய அரசுகளால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) என்பவரையும், புலிகளின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் எனக் கூறிக்கொள்ளும் தயா மோகன் என்பவரையும் நேரடியாகப் பேட்டிகண்டு ஒலிபரப்பினார். எனவே இதிலிருந்து ஒரு உண்மை தெரியவருகிறது. கீதவாணி வானொலி உரிமையாளருக்கு கே.பியின் இருப்பிடம் ஓரளவுக்கு தெரிந்திருப்பதுடன், அந்த மிகப்பெரிய பயங்கரவாதியின் நேர்காணலை ஒலிபரப்பும் துணிச்சலும் அவருக்கு இருக்கின்றது. எனவே கனடிய அரசும், இலங்கை அரசும் கனடாவில் செயல்படுகின்ற புலிச்சார்பு வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் விடயத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இல்லையென்றால் இந்த ஊடகங்கள் கனடிய தமிழ் சமூகத்தை ஒரு வன்முறை மனோபாவமுள்ள சமூகமாக மாற்றி, ஓரளவு உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமைதிப்பூங்காவாகத் திகழ்கின்ற கனடாவை நெருக்கடிக்குள் ஆழ்த்தக்கூடும்.

அத்துடன், கனடாவில் வாழ்கின்ற தமிழ்மக்கள் இந்த ஊடகங்கள் செய்கின்ற பொய்ப்பிரசாரங்களை இனிமேலும் நம்பி ஏமாறுகிற நிலையிலிருந்தும் விடுபடவேண்டும். புலித்தலைமை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியவர்களும் கோழைகளைப்போல இலங்கை அரசாங்கத்திடம்  உயிர்ப்பிச்சை கேட்டு நிற்கின்றனர். இந்த நிலையில், கனடாவில் செயற்படுகின்ற தமிழ் ஊடக மாபியாக்களுக்குப் பின்னால் புலிகள் நிற்கிறார்கள் என அஞ்சி, கனடிய தமிழ் வர்த்தகர்கள் இந்த ஊடகங்களுக்கு விளம்பரம் வழங்குவதையும் கைவிட வேண்டும். கனடிய தமிழ் சமூகத்தை புலிகள் தொடக்கி வைத்த வன்முறைச் சிந்தனையிலிருந்து விடுவிப்பது, ஜனநாயக சிந்தனையுள்ள ஒவ்வொரு கனடிய தமிழனினதும் கடமையாகும்.

theneeweb.de

Written by lankamuslim

மே 31, 2009 இல் 6:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது