Lankamuslim.org

வடக்கு தேர்தலில் ஜ.ம.சு.கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தமிழ்கட்சிகள் மறுப்பு!

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறுவிடுத்த கோரிக்கையை அரசுக்கு அதரவு வழங்கும் ஈ.பி.டி.பி. உட்பட ஏனைய மூன்று தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன.

ஈ.பி.டி.பி., புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நான்கு கட்சிகளையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அக்கட்சிகள் நிராகரித்துள்ளன.

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு தம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியிலேயே போட்டியிடப்போவதாகக் கூறினார்.

எனினும், வன்னியிலிருந்து பலர் இடம்பெயர்ந்திருப்பதால் தமது உறவினர்கள் எங்கு உள்ளனர் என்று தெரியாத நிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் தேர்தல் நடத்துவதற்கு இது சிறந்த தருணம் இல்லையெனவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் தமது கட்சி தனித்துப்போட்டியிடவிருப்பதாக ஈ.பி.டி.பி. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு அரசாங்கத்தால் இயலுமாயின் வடக்கியிலுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்களை அரசாங்கத்தால் நடத்த இயலுமென நம்புவதாக அவர் தெரிவித்தார்.

“இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கு இது சரியான தருணமா என்பது பற்றி நாம் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் அமைச்சர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எனினும்இ புதிய கூட்டணியில் போட்டியிடத் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

neruppu.com

Written by lankamuslim

மே 31, 2009 இல் 6:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது