Lankamuslim.org

தார்மீகப் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது

leave a comment »

சமூகத்துக்காக எழுதுகின்ற, உண்மையை எழுதுகின்ற இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் மற்றும் சஞ்சிகைகள், வாராந்தப் பத்திரிகைகளை வெளியிடுகின்ற வெளியீட்டாளர்களையும் ஊக்குவிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,கடந்த 24.10.2012 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பு

தொகுத்தளிப்பது-இர்ஷாத் றஹ்மத்துல்லா

ගරු හුනෙයිස් ෆාරූක් මහතා

(மாண்புமிகு ஹுனைஸ் பாறூக்)

(The Hon. Hunais Farook)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இன்று மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை நான் ஆமோதிக்கின்றேன். ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றியது இந்த மூத்த தமிழ்’ என்று சொல்வார்கள். உண்மையிலே தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழர்களுக்கு மாத்திரமன்றி தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களுக்கும் உண்டு. ஏனெனில் இலங்கை நாட்டைப் பொறுத்தமட்டில், பெரும்பாலான முஸ்லிம் மக்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதற்காகப் பெரும் தொண்டாற்றியிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் இலக்கியம், நாடகம், சஞ்சிகை, கவிதை போன்ற பல்வேறு துறைகளில் தொண்டாற்றிய வரலாறுகள் இருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தவேண்டிய வனாக இருக்கின்றேன். நான் கடந்த மாதம் இதே நாள் பாரிய விபத்துக்குள்ளானேன். இன்று நான் உயிருடன் இச்சபையில் நின்று உரையாற்றுவதற்கு உதவிய இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிப்பதோடு, அந்தச் சந்தர்ப்பத்தில் என்னையும் என்னுடன் பிரயாணம் செய்த ஏனைய ஐந்துபேரையும் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற முந்தல் பிரதேச பொலிஸ் உத்தியோகத்தா்களுக்கும் அவ்விடத்தில் நின்று உதவிய சிங்கள மக்களுக்கும் நான் இச் சபையினூடாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் நான் குணமடைந்து மீண்டும் நல்ல நிலைமைக்குத் திரும்பவேண்டுமென எனக்காக இறைவனை வேண்டிப் பிரார்த்தனை செய்த எனது ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது நாட்டில் முஸ்லிம்கள் பலர் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்மொழியையும் வளர்ப்பதற்காகத் தொடர்ந்தும் பங்காற்றியிருக்கின்றார்கள். எனது தந்தையின் தந்தையான கிதுர் முகம்மது யூசுப் இலங்கையில் பிரபல யானை பிடி பணிக்கர் எனப் பெயர்பெற்றவர். அவர் கண்டி தலதா மாளிகைக்கும் யானை பிடித்து அன்பளிப்புச் செய்திருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன். அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான் என்பவர் முசலிப் பிரதேசத்திலுள்ள கரடிக்குழி கிராமத்தில் சிறந்த புலவராக விளங்கினார். அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் அமீர் மொகமட் புலவர், நொண்டிப் புலவர், விடத்தல்தீவு காசிம் புலவர் ஆகியோர் தமது இலக்கிய நயங்களையும் புலமைத்துவத்தையும் முன்னெடுத்துச் சென்று தமிழ் மொழியை வளர்ப்பதற்காகப் பாடுபட்டிருக்கின்றார்கள்.

இன்று வராந்தம் வெளிவருகின்ற பத்திரிகைகள் மூலமும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. உதாரணமாக ‘நவமணி’ பத்திரிகை! இந்தப் பத்திரிகை உண்மையில் பல செய்திகளைத் தாங்கி வெளி வந்து கொண்டிருக்கின்றது. இது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கும் சேவை செய்கின்றது. இந்தப் பத்திரிகை உண்மையில் நஷ்டத்தில் இயங்குகின்றபோதிலும் அதனை வெளியிடுகின்ற சகோதரர் என்.எம். அமீன் அவர்கள் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நல்லுணர்வோடு அதனை வெளியிட்டு வருகின்றார். அந்தப் பத்திரிகை தினந்தோறும் வெளி வரவேண்டும் என்று நாங்கள் பிரார்த்திப்பதுடன் அதனை ஓர் ஆலோசனையாகவும் கூறுகின்றோம். இதேபோன்றுதான் ‘எங்கள் தேசம்’, ‘மீள்பார்வை’, ‘சரி நிகர்’, ‘கிழக்கின் உதயம்’ முதலிய பத்திரிகைகளும் வெளிவருகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து ‘எழுச்சி’ என்ற பத்திரிகை மாதந்தோறும் வெளிவருகின்றது. இந்தப் பத்திரிகை யுத்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டு மீண்டும் வெளிவருகின்றது என்று நான் நினைக்கின்றேன். அதேநேரம் ‘அல் ஹஸனாத்’ என்ற பத்திரிகை மாதாந்தம் வெளியாகின்றது. உண்மையில் ‘அல் ஹஸனாத்’ பத்திரிகை, முஸ்லிம்களுக்கு அருளப்பட்டிருக்கின்ற அல் குர்ஆன் கூறுகின்ற விடயங்கள் அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது வாழ்க்கை வழிமுறைகள் என்பன பற்றிய செய்திகளை அவர்களுக்குப் பிரயோசனமளிக்கக்கூடிய வகையில் மாதாமாதம் தொகுத்து வழங்குகின்றது. இவ்வாறு நாங்கள் பல பத்திரிகைகளைப் பெயர் குறித்து கூறலாம். இந்தப் பத்திரிகைகளின் வரலாற்றை அல்லது அதன் பின்னணியைப் பார்க்கும்பொழுது எந்தவித இலாப நோக்கமும் இல்லாமல் சமூகத் தேவைக்காக அல்லது சமூகத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நல்லுணர்வோடு இச்சேவையைப் பலரும் இணைந்து செய்கின்றார்கள்.

எனக்கு ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகின்றது. அதாவது, நான் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் கடமைபுரிகின்ற காலத்தில் இலக்கியப் புத்தகங்களை அல்லது சஞ்சிகைகளை எழுதுபவர்கள், கவிதைத் தொகுப்புக்களை வெளியிடுகின்றவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலர் தங்களது புத்தகங்களைக் கொள்வனவு செய்யுமாறு அங்கு வந்து கேட்பார்கள். ஆனால், அந்த நேரத்தில் புத்தகக் கொள்வனவுக்காக இந்தத் திணைக்களத்திற்கு ஒதுக்கிய பணத்தொகை மிகச் சொற்பமாக இருந்ததனால் ஐந்து அல்லது பத்துப் புத்தகங்கள்தான் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. இன்று அரசாங்கத்துக்கு ஒவ்வொரு துறையிலும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. மஹிந்த சிந்தனை மூலமாகவும் மற்றும் வெவ்வேறு திட்டங்களின் ஊடாகவும் எத்தனையோ நல்ல பல விடயங்களுக்கு ஊக்குவிப்புப் பணம் வழங்குகின்ற எமது அரசாங்கம் இலக்கியத்துறை வளர்ச்சிக்கும் பணவுதவிகளை வழங்க வேண்டும். தமிழ் வெளியீடுகளாக இருந்தாலென்ன அல்லது சிங்கள வெளியீடுகளாக இருந்தாலென்ன அவற்றைக் கொள்வனவு செய்து பிரயோசனமுள்ளதாக ஆக்குவதற்கு விசேட நிதியை ஒதுக்க வேண்டிய தேவை இன்று எமது அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

ගරු අල්හාජ් ඒ.එච්.එම්. අස්වර් මහතා

(மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்)

(The Hon. Alhaj A.H.M. Azwer)

Mr. Presiding Member, I want to make a small intervention.

193, மஹகொட – பேருவளையிலிருந்து ‘அல்லஜ்னா’ என்ற ஓர் இதழை கபூரியா அரபிக் கலாசாலைப் பிரபலமும் அதன் பழமைமிக்க மாணவர்களில் ஒருவருமான எம்.ஐ.எம். ஸாலிஹ் (கபூரி) அவர்கள் வெளியிட்டு வருகின்றார். அது சன்மார்க்க சஞ்சிகை. சுன்னத் வல் ஜமாஅத் சம்பந்தமான கொள்கைகள் எல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன என்ற விடயத்தையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். நன்றி.

ගරු හුනෙයිස් ෆාරූක් මහතා

(மாண்புமிகு ஹுனைஸ் பாறூக்)

(The Hon. Hunais Farook)

குறைந்தது, அந்தப் புத்தகங்களை வெளியிடுவதற்குச் செலவு செய்கின்ற பணத்தையாவது அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட கெளரவ அமைச்சர் அவர்களுக்கும் இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான விடயங்களை முன்மொழிவது நல்லது என்று கருதி, இன்னும் சிலவற்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

கெளரவ உறுப்பினர் அல்ஹாஜ் அஸ்வர் அவர்கள் ‘மல்லிகை’ என்ற சஞ்சிகையின் 400 வது வெளியீடு சம்பந்தமாகக் குறிப்பிட்டார். அதன் முதலாவது வெளியீடு என்ன, 400வது வெளியீடு என்ன என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் தெரியாத நிலையில் இருக்கின்றோம். எனவே, இந்த விடயங்களைத் தெரிந்துகொள்வதற்கு இவ்வாறான நல்ல சஞ்சிகைகளை ஒன்று சேர்த்து வைக்கக்கூடிய museum ஒன்றை உருவாக்க வேண்டும். இதன்மூலம் குறைந்தபட்சம் கடந்த காலத்தில் எவ்வாறு தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என்பன வளர்ந்து வந்திருக்கின்றன என்பது பற்றி எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதேவேளை அத்தகைய எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களைக் கெளரவிக்க வேண்டும். இன்று மிகவும் சொற்ப அளவினருக்குத்தான் கலாபூஷண விருது வழங்கப்படுகின்றது. இஸ்லாம் மதத்தவரில் ஒரு சிலருக்கும் இந்து மதத்தவரில் ஒரு சிலருக்கும் என்று ஒவ்வொரு சமயத்தவருக்கும் அவர்களது துறைக்கேற்ப இந்தக் கலாபூஷண விருது வழங்கப்படுகின்றது. எனவே, விருது வழங்கப்படுபவர்களின் தொகையையும் அதிகரிக்க வேண்டும். அதேநேரம் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற சன்மானம் அல்லது ஊக்குவிப்புத் தொகை மிகவும் சொற்பமாக இருக்கிறது. ஒரு புத்தக வெளியீட்டுக்குச் செலவாகும் தொகைகூட அவர்களுக்கு வழங்கப்படுவதில்லையென நான் நினைக்கின்றேன். எனவே, அவர்களைக் கெளரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இன்னும் பல திட்டங்களை வகுக்கவேண்டுமென்று கூறிக்கொள்கின்றேன். அத்தோடு, இவர்களது வெளியீடுகளை கொள்வனவு செய்வதற்காக முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் மற்றும் இந்து சமய, பண்பாட்டலுவல்கள் போன்ற திணைக்களங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற தொகையை எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்திலாவது அதிகரித்துக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், சமூகத்துக்காக எழுதுகின்ற, உண்மையை எழுதுகின்ற இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் மற்றும் சஞ்சிகைகள், வாராந்தப் பத்திரிகைகளை வெளியிடுகின்ற வெளியீட்டாளர்களையும் ஊக்குவிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அந்த வகையில், கெளரவ உறுப்பினர் அவர்கள் இந்தப் பிரேரணையை முன்மொழிந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகின்றேன். இந்த முன்மொழிவு பிரயோசனமுள்ளதாக அமைவதற்கு, கெளரவ அமைச்சர் அவர்கள் எங்களுடைய ஆலோசனைகளையும் உள்வாங்கி அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கேட்டு, விடை பெறுகின்றேன். நன்றி. வஸ்ஸலாம்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 30, 2012 இல் 10:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக