Lankamuslim.org

வடமாகாண முஸ்லிம் மீள்குடியேற்றத்தின் தடைகளும் முட்டுக்கட்டைகளும்

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கையின் கடந்த காலாண்டு மிகவும் முக்கியமான தொன்றாகவே நோக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 25 வருடங்கள் வடக்கிலும்.கிழக்கிலும் ஏன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற மன நிலையில் தான் தமது அன்றாட வாழ்வை நடத்தியதை யாவரும் அறிவர்.அந்த வகையில் எமது தேசத்தின் வடமாகாணத்தில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பூமியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.அந்த வெளியேற்றத்திற்கு பல்வேறு காரணங்களை எவர் கூறினாலும்,அது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்வு ( கருப்பு ஒக்டோபர்) என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.

நடந்த சம்பவங்களை மீட்டிப்பார்க்கமால் எமது எதிர் கால இலட்சியத்தை நோக்கிய பயணத்தை அடைந்து கொள்ள முடியாது என்று கூறுவதை நாம் கேட்டுள்ளோம்.அப்படியெனில் ஆரம்பம் என்பது தான் முடிவை தீர்மாணிக்கும் சாதகமான காரணி என்பதை புரிந்து கொண்ட நிலையில் இந்த நாட்டில் எதற்காக ஆயுதம் ஏந்தப்பட்டதோ,அந்தஇலக்கை அடைந்து கொள்ள முடியாமைக்கு காரணம் நெறிப்படுத்தப்படாத தலைமைகளும்,பன்படுத்தப்படாத வளங்களுமே என்பதை இன்று மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் வடக்கில் மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் 24 மணித்தியால கால அவகாசத்துக்குள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் புத்தளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அகதி முகாம்களில் வாழ்ந்து வருவதுடன்,சுமார் 22 ஆயிரம் குடும்பங்கள் மீண்டும் தமது தாயகமான வடக்கில் மீள்குடியேறிய தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.அதில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள எவ்வித அடிப்படை வசதிகளுக் இன்றி மீள்குடியேறியுள்ளனர்.. இந்த மீள்குடியேற்றம் என்பது அரசாங்கத்தாலோ,அரச சார்பற்ற நிறுவனங்களின் முழுமையான பங்களிப்புடனோ இடம் பெற்றதொன்றல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான பங்களிப்பை வழங்க வில்லையென்ற குற்றச்சாட்டு இன்றும் இருந்து வருகின்றது. அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவர்களில் வடக்கை பிரதி நிதித்துவப்படுத்துபவர்களை பார்க்கும் தற்போது அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக்,முத்தலி பாவா பாருக் ஆகிய மூவர் இருக்கின்றனர்.ஆனால் அமைச்சர் றிசாத் முன்னடுக்கும் மீள்குடியேற்ற பணிகளுக்கு தொடர்ந்தேச்சையாக தமிழ் தேசி கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகள் இருந்த வண்ணமே உள்ளன.

இதனால் முழுமையான மீள்குடியேற்றம் ஒன்றை செய்ய முடியாத நிலையில் அவர் காணப்படுகின்றார். இது வடபுல முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவான சான்றாகும். அரசாங்கத்தை பொருத்த வரையில் அதற்குள்ளிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதி நிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் மக்களின் தேவை குறித்தே அதிக கவனம் செலுத்தி வருகின்றார்களே ஒழிய,பிற மாவட்ட மக்களது தேவைகள் குறித்து பார்ப்பதில்லை என்பது தான் யதார்த்தமாகும், எனவே தான் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இழுத்தடிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அதே போல அரச சார்பற்ற நிறுவனங்கள் பல தமக்கு நிதி வழங்கும் பிரதான நிறுவனங்களின் கைப்பொம்மைகளாக இருப்பதினால்.அவர்களது எதிர் மறையான நிகழச்சி நிரலுக்கு அமைவே தமது தொண்டு பணிகளை செய்வதையும் அவதானிக்க முடிகின்றது. அண்மைய காலமாக 1990 ஆண்டில் வெளியேற்ற முஸ்லிம்கள் பழைய அகதிகள் என்றும் 2009 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் புதிய அகதிகள் என்றும் வகைப்படுத்தி புதிய அகதிகளுக்கு மட்டுமே நிவாரண பணிகள் முன்னெடுக்க முடியும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம் இரு சமூகங்களுக்கிடையில் மீண்டும் ஒரு இடை வெளியினை ஏற்படுத்தியுள்ளத. மீள்குடியேறும் மக்கள் தமது தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்ள அரச சார்பற்ற நிறுவம் வழங்கும் கொடுப்பனவில் கூட இந்த முஸ்லிம்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுவருவதானது தொடர்ந்து வடமாகாண முஸ்லிம்கள் அகதிகளாக வாழ வேண்டும் என்ற திட்டத்தின் வெளிப்பாடாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.

எது எவ்வாறாக இருந்த போதும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாட்டுக்கு ஒரு தனியான பொறி முறையொன்றை அரசு ஏற்படுத்தாத வரை முழுமையான மீள்குடியேற்ற வலையைமைப்பை அடைந்து கொள்ள முடியாது என்ற உண்மையினை சகல முஸ்லிம் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது என்பது புரியாத விடயமல்ல.எவ்வாறு தமது அரசியல் கதிரைகளை தக்க வைத்துக் கொள்ள அரசுடன் முட்டிமோதி பெற்றுக் கொள்ளுவதை போன்று வடமாகாண முஸ்லிம்களின் வியடத்திலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியது தமது கடமையாக எண்ண வேண்டும்.மாறாக காலத்திற்கு காலம் தோன்றும் நிலை மாற வேண்டும்.

இன்று வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் கழிந்துள்ள நிலையில்,வெளியேற்றத்தின் 23 வது வருடத்தை இம்மாதம் 31 ஆம் திகதியுடன் ஆரம்பிக்கவுள்ளனர். வருடங்கள் பல சென்றுவிட்டன இனியும் வருடங்களை கொண்டாடுவதை விட எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கான திட்ட வரைவுகளை தயாரித்து அதனை உரிய தரப்புக்கு கொடுத்து இம்மக்களை தமது தாயகத்தின் அனைத்து வசதிகளுடனும் மீள்குடியேற்றம் செய்யும் காரியத்தினை ஆற்ற வேண்டும்.

இதனையும் செய்யாது வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு அரசியல் காலங்களில் முன்வருவார்கள் என்றால் அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.தமக்கு இறைவனினால் கொடுக்கப்பட்ட அமானிதமான பதவிகளை சமூகத்திற்காக பயன்படுத்தாத தலைமைகளால் என்ன பலன் இருக்கின்றது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.நடந்ததை மறந்து நடக்க இருப்பதை புரிந்து வடமாகாண முஸ்லிம்களின் துரித மீள்குடியேற்றத்திற்கான பணிகளில் உடன் ஈடுபடுமாறு இந்த கறை படிந்த மாதத்தில் அழைப்புவிடுப்பது தான் அனைத்தையும் இழந்து தவிர்க்கும் வடமாகாண முஸ்லிம்களுக்கு செய்யும் எமது காணிக்கையாகும்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 இல் 10:15 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. உண்மையில் வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவது மிகமிக முக்கியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே வேளை அவர்களை சாதாரண மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்குள் மட்டுப்படுத்தி அவர்களுக்குரிய அனைத்து வகை இழப்புக்களும் சீர் செய்யப்படாது எப்படியாவது அவர்களை அங்கு கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் போதும், இப்போது நாட்டில் அகதிகள் பிரச்சினை இல்லை என்று உலகுக்குக் காட்டிக் கொள்ளும் அடிப்படையில் நடைமுறைப்படுத்தக் கூடாது.

    எச்சிலைப் போடுவது போன்று எதையவவது கொடுத்து அவர்கள் இப்போது பழக்கப்ட்ட அகதி வாழ்வூக்குக் கீழ் மீண்டும் அவர்களை தள்ளிவிடக் கூடாது. அது உண்மையில் அவர்களுக்குப் புலிகள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை, துரோகத்தைவிட மோசமானதாகவே இருக்கும்.

    இவர்களின் பிரச்சினைகள் பக்கச்சார்பற்ற ஆணைக்குழு ஒன்றின் மூலம், மக்கள் கருத்து அறிப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கு நடந்துள்ள இழப்புகள் அனைத்துக்கும் தக்க பரிகாரம் காணும் முறையிலான நடைமுறை முன்னெடுக்கப்பட்ட பின்னரே அவர்களின் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அதுவே நீதியானதும், நியாயமானதுமாக இருக்கும்.

    அவர்களது மீள்குடியேற்றத்தைத் தயவூசெய்து அரசியலாக்கி அவர்களைப் பகடைகளாக்கி விடாதீர்கள். அவர்களது கண்ணீர்தான் பாசிசப் புலிகளை வேரோடு அறுத்தது என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

    nizamhm1944

    ஒக்ரோபர் 25, 2012 at 9:10 பிப


பின்னூட்டமொன்றை இடுக