Lankamuslim.org

மாகாண, மாவட்ட அரசியல்வாதிகளின் பெருநாள் செய்திகள்

leave a comment »

மாகாண, மாவட்ட  அரசியல்வாதிகள் . மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி சில உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ,செனட்டர் மசூர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்

 உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் பெருநாள் வாழ்த்துச் செய்தி!:

எஸ்.அஷ்ரப்கான்,F.M.பர்ஹான்: தியாகப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் உலகளாவிய முஸ்லிம்களுக்கு இறைவனின் அருளும், அவனது அன்பும் கிடைக்க வேண்டுமென பிராத்திப்பதுடன் குர்ஆன் ஹதீத் ஒளியில் ஒற்றுமைப்பட்ட சமூகமாய் வாழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமெனவும் அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்துகிறது.

ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஹஜ் என்பது வருடத்தில் ஒரு தடவை வருகின்ற பெரு நிகழ்வாகும். முழு முஸ்லிம் சமூகத்தினதும் கவனத்தை அரபாவின் பக்கம் திருப்பி உலகளாவிய உம்மத்தின் ஒற்றுமையை பறை சாற்றும் சிறந்ததொரு வணக்கமாகும். இந்த வணக்கத்தின் மூலம் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த நபி இப்றாஹீம் அவர்களின் தியாக வாழ்வை நாம் உணர்வதுடன் உலகளாவிய மக்களை ஹஜ்ஜுக்கு வரும் படி மக்காவுக்கு அழைத்த முதல் முஸ்லிமாகவும் அவர் திகழ்கிறார். அதன் மூலம் முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் வரலாறு என்பது ஆயிரத்து நானூறு வருடங்கள் அல்ல அதனையும் தாண்டிய ஐயாயிரம் வருடங்களைத்தாண்டியது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்கிறோம்.

இத்தகைய உண்மையை ஹஜ் பெருநாளின் தாத்பரியம் நமக்கு தெளிவுபடுத்துமாயின் அதுதான் பெருவெற்றியாகும்.

இத்தகைய தெளிவான பாதையில் இருந்து கொண்டு இந்த தியாக பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வல்ல நாயனின் அன்பு கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

செனட்டர் மசூர் மௌலானாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

அஸ்லம் எஸ்.மௌலானா: உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்கு இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஈராக் முதல் பலஸ்தீன் வரை பல அரபு, முஸ்லிம் நாடுகள் கடந்த பல வருடங்களாக அந்நியரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்நாடுகளில் அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரபுலகின் பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சதிகளை அரங்கேற்றி வருகின்றன.

அதேவேளை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற பல நாடுகளில் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக மாறி வருகிறது.

ஆகையினால் புனித மக்காவில் நாடு, நிறம் மற்றும் பேதங்களை மறந்து இஸ்லாமியர் என்ற ஒரே கொள்கையுடன் இறைவனுக்காக லட்சக் கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி நமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள இன்றைய நன்னாளில் உலகளாவிய முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு நிரந்தர ஐக்கியத்துடன் – சகோதரத்துவ வாஞ்சையுடன் ஒரு முன்மாதிரியான சமூகமாக திகழ்வதற்கு உறுதி பூணுவோம்.

இதன் மூலமே சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்க முடியும் என்று திடமாக நம்புவோம்.

அதேவேளை கடந்த கால போரினாலும் மற்றும் அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் அகதி வாழ்வு நடத்துகின்ற நமது வடக்கு – கிழக்கு மக்களளுக்கு நிம்மதியான வாழ்வு மலர்வதற்கு இப்புனிதத் திரு நாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். ஈத்முபாரக்.

மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

அஸ்லம் எஸ்.மௌலானா: முஸ்லிம் சமூகம் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்கு இப்புனிதத் திருநாளில் திட சங்கற்பம் பூணுவோம் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

உலகின் எட்டுத் திசைகளில் இருந்தும் பல லட்சம் முஸ்லிம்கள் புனித மக்காவில் ஒன்றுகூடி நிறைவேற்றுகின்ற ஹஜ் கடமையானது நமக்கு பல்வேறு படிப்பினைகளைப் போதிக்கின்றது.

தியாகம், சகிப்புத் தன்மை, சமத்துவம், ஒற்றுமை போன்ற சிறப்பம்சங்கள் அவற்றுள் மிக முக்கியமானவையாகும்.

இந்த சிறப்பம்சங்களும் நற்குணங்களும் நமது அன்றாட வாழ்வில் நிலைத்து நிற்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய பண்புகளை ஒவ்வொரு தனி மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும்போது சமூக கட்டமைப்பிலும் நாட்டிலும் முழு உலகத்திலும் வீண் பிணக்குகள் ஏற்பட ஒருபோதும் வாய்ப்பிருக்காது.

நமது இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் இத்தகைய பண்புகளை முஸ்லிம்கள் கடைப்பிடித்து பிற மதத்தினருக்கு முன்மாதிரியாக திகழ்வதன் மூலம் அன்னியரின் நெருக்குவாரங்களில் இருந்து நாம் விடுபடவும் அவர்களது சூழ்ச்சிகளை முறியடிக்கவும் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்கவும் இஸ்லாம் எழுச்சி பெறவும் வாய்ப்பேற்படும்.

எனவே இன்றைய ஈகைத் திரு நாளில் முஸ்லிம்கள் அனைவரும் இத்தகைய உயர் பண்புகளைப் பேணி, தமக்குள்ள ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி, ஒரு பக்குவப்பட்ட சமூகமாக திகழ்வதற்கு உறுதி பூணுவோம். ஈத்முபாரக்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 இல் 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக