Lankamuslim.org

முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம்

leave a comment »

அஸ்லம் எஸ்.மௌலானா: சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையிலும் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம்.

பல அரபு, முஸ்லிம் நாடுகள் இன்று மேற்குலக சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன. குறிப்பாக அந்த நாடுகளின் பெற்றோலிய, எண்ணெய் வளத்தை கபளீகரம் செய்வதற்காகவும் இஸ்லாம் மார்கத்தின் எழுச்சியை தடுப்பதற்காகவும் பாரிய சூழ்ச்சித் திட்டங்களை அந்த சக்திகள் அரங்கேற்றி வருகின்றன.

அரபு, முஸ்லிம் நாடுகளில் தோன்றுகின்ற உள்நாட்டு சமூக முரண்பாடுகளை இந்த சர்வதேச – ஏகாதிபத்திய சக்திகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை நாம் கண்கூடு காண்கின்றோம்.

நமக்குள் எழுகின்ற பிரிவினைகளே சூழ்ச்சிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன என்பதை உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும்பொறுப்புடன் சிந்தித்து உணர வேண்டும்.

புனித மக்காவில் ஹஜ் கடமையின் போது அனைத்து பேதங்களையும் மறந்து இஸ்லாமியர் என்ற ஒரே வரையறைக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற நம்மால் ஏன் அதனை நமது சமூக வாழ்வில் நிலை நாட்ட முடியாது என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

எனவே கடந்த கால, நிகழ்கால கசப்பான சம்பவங்களை படிப்பினைகளாகக் கொண்டு இந்த ஹஜ் பெருநாள் தினத்தில் சமூக மாற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் வேண்டிய அனைத்து வகையான முயற்சிகளையும் முன்னெடுக்க உறுதி பூணுவோம்.

அத்துடன் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தினதினதும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் நிம்மதியான வாழ்வுக்கு வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று பிரார்த்திப்போம். ஈத் முபாரக்

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2012 இல் 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக