Lankamuslim.org

சகல மதங்களும் சமமானவை என்ற பிரதமரின் கருத்துரைக்கு ஹெல உறுமய விளக்கம் கோருகின்றது

leave a comment »

இலங்கையில் அனைத்து மதங்களும் சமமானதே எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை இல்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்திருக்கும் கருத்தானது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலமைப்புக்கும் முரணானது என்று தெரிவித்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பில் பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் விரிவாக

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இலங்கையில் அனைத்து மதங்களும் சமன் என்றும் எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை இல்லை என்றும் பிரதமர் ஜயரட்ன கடந்த 24 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.இந்த கருத்தானது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கும் நாட்டின் அரசியலமைப்புக்கும் முரணானது.அவர் பதவியேற்கும் போது நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுவதாகவே உறுதியளித்துள்ளார்.இவ்வாறான நிலைமையில் பிரதமரின் இந்த கருத்து அரசியலமைப்பை மீறும் செயலாகவே அமைந்துள்ளது.

அரசியலமைப்பை பொறுத்த வரை பௌத்த சமயத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் அனுபவம் மிக்க அரசியல்வாதி ஆகவே அவர் அறியாமல் இந்த கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார்.ஆகையால் அவரது இந்தக் கருத்து பற்றி தெளிவுப்படுத்த வேண்டும்.

தலதா மாளிகை அமைந்துள்ள கண்டியில் பிறந்தவர் பிரதமர்.அத்துடன் மல்வத்து,அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆசியுடனேயே அவர் இந்த பதவிக்கு வந்தார்.எனினும் பொறுப்புள்ள வகையிலும் அரசியலமைப்புக்கு முரணான வகையிலும் அவர் தற்போது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

2660 ஆவது புத்த ஜயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேலைத்திட்டமொன்றை வெளியிட்டுள்ள நிலையில் பிரதமரும் தனியாக செயற்றிட்டமொன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கிறிஸ்தவ,இஸ்லாம்,இந்து மாவட்ட குழுக்கள் அமைப்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

புத்த ஜயந்தி என்பது பௌத்த மதத்தினருக்குரியது.தான் எங்கே இருக்கிறேன் என்பதை பிரதமர் மறந்து விட்டார் மேலும் அவர் எந்த நாட்டின் பிரதமர் என்பதையும் மறந்து விட்டார்.

பௌத்த மாதம் பற்றி இலங்கையில் பேசுவது மதவாதமல்ல. வத்திக்கானில் கிறிஸ்தவம் பற்றியும் சவூதி அரேபியாவில் இஸ்லாம் பற்றியும் நேபாளத்தில் இந்து மதம் பற்றியும் பேசுவது மதவாதமல்ல.பிரதமர் அசுத்த சக்திகளுக்கு அடிபணிந்து விட்டாரா என்று எமக்கு சந்தேகம் எழுகின்றது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மன்னார் அமர்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்த கருத்துக்களுடன் பிரதமரின் இந்த கருத்துக்களும் ஒத்துப்போகின்றன.

இலங்கையில் சிங்கள பௌத்த வாதம் தொடர்பில் அச்சம் நிலவுவதாக ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்திருந்தார்.அரந்தலாவையில் பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட போதும் சரி,தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டபோதிலும் சரி, கொழும்பிலுள்ள கதிரேஷன் கோவிலில் நடைபெற்ற உற்சவத்தில் சிங்கள மக்கள் தேங்காய் உடைத்தனர்.

பௌத்த மதம் அன்பையே போதிக்கின்றது.ஆகவே பிரதமர் தனது கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.- தினக்குரல்

Written by lankamuslim

ஜனவரி 19, 2011 இல் 10:02 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக