Lankamuslim.org

காணி உரிமைகளை பறிகொடுத்தவர்கள் மீள அவற்றை பெற்றுக்கொள்ள விரைவில் சட்டம்

leave a comment »

FM.பர்ஹான்: யுத்தகாலத்தில் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் தமது காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யும் விதத்திலான சட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (27) முற்பகல் தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய அவுஸ்திரேலிய தூதுவர் ரொபின்மூடிடம் அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பொதுநலவாய நாடுகளைப் பொறுத்தவரை இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நெருங்கிய நல்லுறவு நிலவி வருவதாகவும், அண்மையில் பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களின் மாநாட்டில் தாம் வழக்கறிஞரான அந் நாட்டு நீதியமைச்சரைச் சந்தித்து இரு நாடுகளின் நீதித்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்களை பற்றி கலந்துரையாட வாய்ப்பு கிட்டியதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் நிலக் கண்ணி வெடி அகற்றலுக்கும், மீள்குடியேறும் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் பங்களிப்புகளை செய்து வருவதாக அந் நாட்டுத் தூதுவர் தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

சிறையிலுள்ள தமிழ் சந்தேக நபர்கள் பற்றிய தூதுவரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், அவ்வாறான ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் பேரில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், சமூகமயப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியதோடு, குற்றச்சாட்டுகள் உள்ள குறிப்பிட்ட சிலரின் விவகாரத்தில் விரைவில் உரிய தீர்வு காணப்படவிருப்பதாகவும் கூறினார்.

நாட்டுக்கு நாடு சட்டவிரோதமாக மனிதர்களை கடத்தும் விவகாரத்தை முறியடிப்பதற்கு இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றி அமைச்சரும், தூதுவரும் திருப்தி தெரிவித்தனர். பசுபிக் சமுத்திரத்தின் ஊடாகவும், அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாகவும் இடம்பெறும் சட்ட விரோத ஆட்கடத்தல் பற்றியும் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையின் நீதித்துறையில் இந் நாட்டுக்கே உரிய தனித்துவமான அம்சங்களும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் நீதிமன்ற நடைமுறைக்கு புறம்பாக பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வை காண்பதில் தமது அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மத்தியஸ்த சபைகள் அளப்பரிய பங்களிப்பை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாஉரிமைக்கான அமைச்சர் கிறிஸ் போவன் தமது இலங்கை விஜயத்தின் போது நீதியமைச்சர் ஹக்கீமை அடுத்த மாத ஆரம்பத்தில் சந்திப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 இல் 7:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக