Lankamuslim.org

சுயாதீன கமிஷன்களுக்கு சகல இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படல் வேண்டும்

leave a comment »

parliament-sri-lanka-interior19வது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு கவுன்சிலின் கீழ் பல சுயாதீன கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.

மேற்படிக் கடிதத்தில் சுயாதீனக் கமிஷன்களுக்கு சகல இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடித்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் 8வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. சபாநாயகர் பதவிக்கு உங்களைப் போன்ற ஒரு ஆளுமைமிக்க ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது சரியான தருணத்தில் செய்யப்பட்ட புத்திசாதூர்யமான ஒரு செயலாகவே நாம் கருதுகிறோம். பக்கச்சார்பற்ற விடயங்களை பரந்த நோக்கில் பார்க்கின்ற நடுநிலையான ஒரு தலைமைத்துவத்தின் அவசியம் களத்தின் தேவையாக உள்ளது.

சுதந்திர இலங்கையில் நாம் வெற்றி பெற்ற ஒரு தேசமாக வருவதற்குரிய சகல வாய்ப்புக்களையும் இழந்து தோல்வியுற்றிருக்கின்ற நிலையில் எமது எதிர்காலம் குறித்து புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.

100 நாள் அரசாங்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட 19வது திருத்தப் பிரேரணை அரசாங்கத்தின் பல நிறுவனங்களையும் ஜனநாயக மயப்படுத்தக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிறுவாகத்தின் பல முக்கிய பகுதிகளுக்கும் நிறுவங்களுக்கும் சுயாதீன கமிஷன்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.

துருவப்படுத்தப்பட்டுள்ள எமது தேசத்தின் மக்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் பரஸ்பரம் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பகூடிய ஒரு அருமையான சந்தர்ப்பமாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதனைக் கருதுகின்றது. எனவே, அனைத்து கமிஷங்களுக்கும் உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது மலையகத் தமிழர்கள் உட்பட சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகைகளில் உறுப்பினர்களைத் தெரிவு செய்யுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கின்றது.

நாம் இந்த வேண்டுகோளை விடுத்திருப்பது தேசிய ஐக்கியம் மற்றும் மீள் இணக்கம் குறித்து புதிய அரசாங்கம் உண்மையான அக்கறையோடு செயற்படுகின்றது என்பதனை வெளிப்படுத்தவும் எமது தேசத்தின் சகல தரப்பினரையும் அங்கீகரிப்பதாகவும் தேசிய விவகாரங்களில் அவர்களது பங்களிப்பினை வழங்கக்கூடிய வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவதாகவும் அமையும்.

எனவே, அரசியலமைப்பு கவுன்சிலானது உங்களது தலைமையில் எமது இந்த ஆலோசனைகளைச் சாதகமாகப் பரிசீலித்து உரிய கவனத்தைச் செலுத்தி அமையப்போகும் ஒவ்வொரு கமிஷங்களுக்கும் சகல இனக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.”

 ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2015 இல் 7:36 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக