Lankamuslim.org

உள்ளுராட்சி அரச நிர்வாக கிராமசேவை பிரிவுகளுக்கான எல்லைகள் மீள் நிர்ணயம்

with 4 comments

முஸ்லிம்களுக்கான ஒரு தேசிய செயலணி அவசியம்

அஷ்ஷெய்க் மஸீஹூத்தின்  இனாமுல்லாஹ்
கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் தற்போதைய அரசியலமைப்புடன் முரண்படவில்லை என நவம்பர் மாதம் 15ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்தார்.

போருக்குப் பின்னரான இலங்கையில் சிறுபான்மையினரை  வெகுவாகப் பாதிக்கக் கூடிய பல்வேறு அரசியல் வியூகங்களைக் கொண்டுள்ள இந்தச் சட்ட மூலத்தை சர்ச்சைக்குரிய தற்போதைய அரசியலமைப்புடன் முரண்படச் செய்யும் வல்லமையோ பாராளுமன்றத்தில் சட்டமாவதை தடுத்து நிறுத்தும் அரசியல் பலமோ ஆளுமையோ தற்போதைய சிறுபான்மை அரசியல் கட்சிகளிடம் இல்லை விரிவாக பார்க்க

ஏற்கனவே பல தடவை பிற்போடப்பட்ட உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டு ஏப்பிரல் 16ஆம் திகதி புதிய அவைகளின் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது.
எனவே மேற்படி சட்ட மூலத்தை மிக விரைவில் விவாதத்திற்கு எடுத்து பாராளுமன்றத்தில் அரசுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சட்டமாக்குவதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளன.

அடுத்த கட்ட உடனடி நடவடிக்கையாக உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யவதற்கான மாவட்ட ரீதியிலான ஆணைக்குழுக்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நியமிப்பார்.

2011 மார்ச் மாதம் முடிவதற்குள் நாடு தழுவிய மட்டத்தில் பிரதேச சபைகள்,   நகர சபைகள், மாநகர சபைகளுக்கானதும்  அவற்றின் உள்ளக வட்டாரங்களான புதிய எல்லைகள் மீள் நிர்ணயம் நிறைவுற வேண்டும் என ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.
மேற்படி மாவட்ட ரீதியிலான மீள் நிர்ணய ஆணைக்குழுக்களை ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஒரு மத்திய அமைச்சர் தீர்மானிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில் பிரதானமாக:

அ)-1987 ஜூலை 30இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய  இலங்கை உடன்படிக்கையின்படி அதேவரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளின் நியாயாதிக்கத்திற்குள் கொண்டுவரப்பட்ட உள்ளுர்ராட்சி மன்றங்களின் எல்லைகள் மீள் நிர்ணயம் மத்திய அமைச்சரின் அரசின் நேரடி தலையீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை!

ஆ)-தற்போது உள்நாட்டவர்கள் ஒரு சிறுபான்மையின அமைச்சராக இருந்த போதும் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே ஆணைக்குழுக்களும் அதன் பரிந்துரைகளும் அமைந்து விடலாம்.
எனினும் மேற்படி மாவட்ட ரீதியிலான ஆணைக்குழுக்களில் கீழ்க் காணும் பிரதிநிதிகள் அடங்குவர்:

1)மாவட்ட அரசாங்க அதிபர்
2)தேர்தல் ஆணையகத்தின் பிரதிநிதி
3)மாகாண உள்ளுர்ராட்சி அமைச்சின் பிரதிநிதி
4)நில அளவை ஆணையகத்தின் பிரதிநிதி
5)குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் பிரதிநிதி
6)அமைச்சரினால் நியமிக்கப்படும் பொது சேவை அதிகாரி

உள்ளுர்ராட்சி எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படுகின்ற பொழுது பல்வேறு விடயங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
குறிப்பிட்ட பிரதேசத்தின் சனத்தொகை, புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, வளங்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதிகள், பொருளாதார செயற்பாடுகள், மக்களின் வாழ்வாதார தொழிற்துறை முயற்சிகள், இனரீதியிலான விகிதாரசாரம் மற்றும் இன்னோரன்ன அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கான காரணிகள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

சனத்தொகை குடிசனப் பரம்பலைப்  பொறுத்த வரையில் 1981ஆம் ஆண்டு நாடு தழுவிய மட்டத்தில் முழுமையாக பெறப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பின்னர் 2001ஆம் ஆண்டு பெறப்பட்ட மதிப்பீடு வடகிழக்கு புலம்பெயர்வுகளுடன் முழுமை பெறவில்லை என்பதனாலும் 10 வருடம் ஒரு தசாப்த காலம் பழமையானதாலும் 2011ஆம் ஆண்டு ஒரு நாடு தழுவிய குடிசன மதிப்பீடு பெறப்படுவதே நீதியும் நியாயமும் முறையானதுமாகும்.

ஆனால் போருக்குப் பின்னர் வடகிழக்கில் மக்கள் குடிசனப் பரம்பலில் புதிய திட்டமிடப்பட்ட குடியேற்றங்களுடாக ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்கள் சிறுபான்மையினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்த போதும் தலைக்கு மேலால் சுனாமி போயுள்ள நிர்க்கதி நிலையில் கையாலாகாத அண்டிப்பிழைக்கும் அரசியலை மாத்திரமே செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

தற்போது நாட்டில் 325 உள்ளுர்ராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றின் 225 பிரதேச சபைகள், 28 மாநகர சபைகள், 18 மாநகராட்சி மன்றங்கள் எத்தகைய இனவிகிதாசார அடிப்படைகளையும் அனுசரித்து அமைக்கப்படாத இவை சிறுபான்மை தமிழ், முஸ்லிம், மலையக மக்களது நலன்களுக்கு முரணாகவே அமைந்துள்ளன. சர்வதேச மீள் நிர்ணய ஆணைக்குழுக்களுக்கு முன்னர் தமிழ் முஸ்லிம் மலையக அரசியல் மற்றும் சிவில் தலைமைகள், குழுக்கள் மற்றும் தனிநபர்கள் தோன்றி தமது பரிந்துரைகளை பிரேரணைகளை சமர்ப்பிக்கத் தவறின் இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு அரசியல் விலங்குகளாக அடிமைகளாக அனாதைகளாக நடத்தப்படுவோம் என்பது கேள்விக் குறியாகும்.

ஜனாதிபதியவர்கள் சர்வகட்சி மாநாட்டு அமர்வுகளின் துவக்கத்தில்(2006)வலியுறுத்தியது போன்று தொடர்ச்சியாக தெளிவாக அவரது உரைகளிலும் இறுதியாக பிரித்தானிய உள்விவகார அமைச்சர் லியம்பொக்ஸிடம் அண்மைய சர்ச்சைக்குரிய விஜயத்தின் போதும் பின்வரும் கூற்றை முன் வைக்கின்றார்.

”மூன்று தசாப்த கால குரூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாங்கள் எங்களுக்கே உரிய சர்வதேச பாணியிலான அதிகார பரவலாக்கத்தை அடிமட்டத்திலிருந்து வழங்குவதன் மூலம் நாட்டின் சகல இன மக்களையும் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாற்றுவோம். எங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தீர்வுகள் அவசியமில்லை’

எதிர்காலத்தில் மாகாண சபைகளோ அல்லது பிராந்திய சபைகளோ தாயக கோட்பாடுகளுக்கு இசைவான அதிகாரங்களுடன் அமைவது குறித்து கனவு காணுவதை விடுத்து சகல சிறுபான்மையின கட்சிகளும் உள்ளுர்ராட்சி மன்றங்களின் எல்லைகள் மீள் நிர்ணய ஆணைக்குழுக்களிடம் தத்தமது சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை நலன்களை உறுதிப்படுத்துகின்ற பரிந்துரைகளை முன் வைக்க முனைப்புடன் முன்வர வேண்டும்.

அரச அதிபர், கிராம சேவை நிர்வாகப் பிரிவுகளின் எல்லைகளின் மீள்நிர்ணயம்,

இலங்கையின் அரசியல் தேர்தல் கட்டமைப்புக்களுக்கு அப்பால் அதி முக்கியத்துவம் வாய்ந்த அரச யந்திர நிர்வாக கட்டமைப்புக்களான அரச அதிபர், உப அரச அதிபர், கிராம சேவை அலுவலர் பிரிவுகளினது எல்லைகளும் போருக்குப் பின்னரான இலங்கையில் துரிதமான மீள்நிர்ணயம் செய்யப்படுவதற்கான முஸ்தீபுகளை ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி முடுக்கி விட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மத்திய வங்கி ஆளுனர் எச்.ஜி.திஸாநாயக்கவின் தலைமையில் 13 அங்கத்தவர் கொண்ட ஆணைக்குழுவொன்றை கடந்த ஆகஸ்ட்(2010)மாதம் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நியமித்துள்ளார். செப்டெம்பர்  மாதம் முதல் செயற்பட ஆரம்பித்துள்ள மேற்படி ஆணைக்குழுவிடம் கிழக்கு மாகாணத்திலிருந்தும் குருநாகல் மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான பரிந்துரைகள், பிரேரணைகள்  முன் வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி எஸ்.கே.வீரதுங்க அண்மையில் ஊடகத்துக்கு தெரிவித்திருந்தார்.

வடக்கில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் உதவி(அரசாங்க அதிபர்)மாவட்டச் செயலாளர்கள் அல்லது மேலதிக மாவட்டச் செயலாளர்கள் பெறப்படும் விதத்தில் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படுவதற்கான தேவை உணரப்பட்டுள்ளது. வடகிழக்கிற்கு வெளியே முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் பல பகுதிகளில் கூட இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. அதேபோன்று சகல மாவட்டங்களிலும் முஸ்லிம்களுக்கான கிராம சேவை அலுவலர்களையும் நிர்வாக அலகுகளையும் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அவ்வப்பிரதேச சிவில் மற்றும் அரசியல் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சில  பிரதேசங்களைத் தவிர நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளுர்ராட்சி அமைப்புக்களின் எல்லைகளுக்கும் மாவட்ட அரச மற்றும் உதவி அரச அதிபர் கிராம சேவை அலுவலர் பிரிவுகள் என்பவற்றுக்குமிடையில் இயன்றவரை ஒருமுகப்படுத்தப்பட்ட வலயங்களைத்  தோற்றுவிக்கப்படுவது குறித்து அரசு கவனம் செலுத்துவதாக அறிய முடிகிறது. உள்ளுர்ராட்சித் தேர்தல் முறைத் திருத்தச் சட்ட மூலத்தில் அவதானிக்கப்பட்ட பல்வேறுவிதமான பாதகங்களை மேற்படி எல்லைகள் நிர்ணயத்தின்போது கண்ணியமாக செயற்படுவதன் மூலம் இயன்றவரை குறைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

பல்வேறுபட்ட குறைபாடுகள் பாதகமான அம்சங்கள் இருந்தாலும் கூட சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரை இந்நாட்டில் அடிமட்ட அரசியல் மற்றும் அரச நிர்வாகத்தில் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ளக் கூடிய மிகவும் அரியதொரு சந்தர்ப்பமாக இவற்றை நாம் கருதலாம்.
துரதிஷ்டவசமாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இவ்விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான (அல்லது ஆக்கபூர்வமற்ற) எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இந்நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெறும் அடிமட்ட அரசியல் நிர்வாக பரவலாக்கல் முயற்சியில் முஸ்லிம் சமூகம் நூறு வீத பங்களிப்பினை செய்துகொள்வதற்கு அரசியல் மற்றும் சிவில் தலைமைகளைக் கொண்ட ஒரு தேசிய செயலணி அவசரமாகவும் அவசியமாகவும் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.

முஸ்லிம்களுக்கான தேசிய செயலணி ஒன்று அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளை மாத்திரம் நம்பியிருக்கும் நிலையில் சமூகம் இன்று இல்லை என்பதனால் சிவில் தலைமைகள் விரைவாக செயற்பட முன்வர வேண்டும்.

முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அவர்களது வசதி வாய்ப்புகள், விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப இந்த விவகாரத்தை அணுக அனுமதிக்க முடியாது. அவர்களை ஒன்றாக அமரச் செய்து அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற  பணியினைப் பெற்றுக் கொள்வது சிவில் தலைமைகளினதும் அவ்வவ் பிரதேச மக்களினதும் கடமையாகும்.

இந்த வகையில் தேர்தல் தொகுதிகள், உள்ளுர்ராட்சி மன்றங்கள், அரச அதிபர் நிர்வாக மற்றும் கிராம சேவைப் பிரிவுகளின் எல்லைகள், மீள்நிர்ணயம் தொடர்பாக ஒரு அரசியல் செயலணி அமையப் பெறின் அது எவ்வாறு அமைவது, நடைமுறையில் சாத்தியமாக அமையும் என்பதனை சிவில் தலைமைகளின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

மத்திய சப்ரகமுவ மாகாணங்கள்

அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அமைச்சர் பைஸல் முஸ்தபா
அமைச்சர் அப்துல் காதர்
பா.உ.கபீர் ஹாசிம்
மாகாண சபை உள்ளுர்ராட்சி  முஸ்லிம் உறுப்பினர்கள்

மேல் வடமேல் மாகாணம்

அமைச்சர் எம்.எச்.முஹம்மது
பா.உஅஸ்வர்
முன்னாள் அமைச்சர் பாயிஸ்
முன்னாள் பா.உ.ஷபீக் ரஜாப்டீன்
முஸ்லிம் ஹாஜியார்
மாகாண உள்ளுர்ராட்சி முஸ்லிம் உறுப்பினர்கள்

வட- வட மத்திய மாகாணம்

அமைச்சர; ரிஷாத் பதியூதின்
பா.உ.ஹுனைஸ் பாரூக்
பா.உ.பாரூக்;
சட்டத்தரணி என்.எஸ்.ஷஹீத்
முஸ்லிம் மாகாண உள்ளுர்ராட்சி
சபை உறுப்பினர்கள்

திகாமடுல்ல மாவட்டம்

அமைச்சர் அதாவுல்லாஹ்
முன்னாள் அமைச்சர் பேரியல்
முன்னாள் பிரதி அமைச்சர் சேகு
முன்னாள் பிரதி அமைச்சர் நிஜாம் டீன்
பா.உ.ஹஸானா
பா.உ.பைஸல்; காஸிம்

முஸ்லிம் மாகாண உள்ளுர்ராட்சி சபை உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டம்

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா
பிரதி அமைச்சர் பஷீர்
ஹாபீஸ் நஸீர் அஹமது
மாகாண உள்ளுhராட்சி
உறுப்பினர்கள்

திருகோணமலை மாவட்டம்
பா.உ.நஜீப்
பா.உ.தௌபீக்
மு.பா.உ. தௌபீக்
மு.பா.உ.மஹ்;ரூப்


இது தொடர்பான எமது முந்திய பதிவுகள்


Written by lankamuslim

திசெம்பர் 15, 2010 இல் 9:27 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. இப்போது உள்ள சிறந்த மனிதர்களில் இவரும் ஒருவர் என்று என் பார்வையில் புலப்படுகிறது. மனிதனுக்காக மனிதன் உதவுகிறான் என்றால் இவ்வாறுதான். சுய நோக்கம் இன்றி சமுதாய பற்றோடு சேவையாற்றும் இவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    ஜாவித்

    திசெம்பர் 16, 2010 at 10:26 முப

  2. muslimkalin thevaikalai seifavarkalukku ithu oru nalla santharppam

    mohamed azath

    திசெம்பர் 16, 2010 at 11:56 முப

  3. you r correct the time to do ,all Muslim politician with Ruling Party, the time Now to Muslim Scholars , should work hard, As Muslim Society we can not relay on politicians !!!

    Mohamed Ali

    திசெம்பர் 16, 2010 at 12:37 பிப

  4. எல்லா வித பேதங்களையும் துறந்து முஸ்லிம்கள் ஒன்றுபட்டு இனத்தின் குறிக்கோளினை அடைய செயல்படவேண்டிய காலத்தின் தேவையினை, பிரதேச பிரதிநிதிகளை பிரேரிக்கும் பாணியில் திரு இனமுல்லாஹ் அவர்கள் நாசுக்ககாக எடுத்துக்காட்டியுள்ளார்.
    எல்லோரும் ஒன்றுபட்டு, பிரதான அரசியல் கட்சிகளுடன் நல்லெண்ணத்தினை வளர்பதொடு , பரஸ்பர நம்பிக்கையினும் வளர்க வேண்டும்,
    நமது சமுதாயத்தின் தனித்தன்மையினை காக்கவும், மற்ற இனங்களுடன் ஒற்றுன்மையுடன் வாழும் நமக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கவும் இதுவும் வழிகோலும்.
    பிளவு பட்டு, வீண் வித்ன்டாவதங்காலி வளர்பதின் முலம் கிடைத்த நன்மையோ, கிடைக்கும் பலனோ ஒன்றுமில்லை.

    இங்கே இன்னொரு முக்கிய விடயத்தினும் கொடிக்க்காட்ட விரும்புகிறேன்.
    ஏற்கனவே நாட்டில் சில நிஷமிகள் நம் சமுஹத்திற்கு களங்கம் விளைக்கும் வகையில் அரசியல் பிளவுகளிலும் சில பிரதேச தேர்தல் பெருபெருகளிலும் சம்பந்தப்படுத்தி ஒரு
    பிரச்சினைக்குள் நம்மை சிக்க வைக்க முனைவது புலனாகிறது.
    இது நம்மவர்க்கு எதிராக அனாவசியமான பொராமையையும் , பொராமை சான்ற எதிர்ப்புகளையும் தாக்கங்களையும் விளைவிக்கும் அபாயமும் உண்டு.

    கொண்ட கொள்கை எதுவானாலும் புத்து சாதுரியத்துடன் செயல்படுதல் அவசியம். எவருடைய வெற்றிக்கோ தொவிக்கோ நம் சமுதாயம் காரணப்படுத்த பட்டு தாக்கபடுவது அனுமதிக்க முடியாது.

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

    hassan

    மார்ச் 24, 2011 at 12:30 பிப


பின்னூட்டமொன்றை இடுக