Lankamuslim.org

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்!

with one comment

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி: கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் இதுவரை காலமாக நிலவி வருகின்ற சமூக ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர். சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தூண்டிக்கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இஸ்லாம் காட்டிய வழிமுறையொன்று இருக்கிறது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவூட்ட விரும்புகிறது.

பிரார்த்தனையே ஒரு முஸ்லிமின் ஆயுதம் என்ற அடிப்படையில் துஆக்கள், தௌபா, இஸ்திஃபார், சுன்னத்தான நோன்புகள் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்ளும் அதேநேரம் சட்டரீதியாகவும் ஒழுங்காகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறது.

கண்டனங்களை உரிய இடங்களுக்கு எத்தச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ஒவ்வொருவரும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ, சாலைமறியல்களில் ஈடுபடுவதோ, வீதிப்போக்குவரத்துக்கு குந்தகம் விளைவிப்பதோ கூடாது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக எம்மோடு இணங்கி நடக்கும் பௌத்த சகோதரர்களது மனம் புண்படுமாறு நடந்துகொள்ளவும் கூடாது. அவ்வாறே எமது பள்ளிவாசலைத் தாக்கினார்கள் என்பதற்காக மதங்களைத் தூற்றுவதை தவிர்ப்பதுடன், நடுநிலைமையானவர்களோடு நன்முறையில் நடந்து அவர்களது உள்ளத்தையும் நாம் வென்றிட வேண்டும். இது ‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்” என்ற அல்குர்ஆனின் அறிவுரையாகும்.

ஒரு சிலர் பள்ளிவாசல் விடயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம்களாகிய நாம் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. எமக்கென இஸ்லாம் கூறியுள்ள வரையறைகளைப் பேணி நடந்து கொள்ளவே சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அழைக்கும் அதேவேளை, ஜம்இய்யத்துல் உலமா ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்காத போதிலும் ஹர்த்தாலில் ஈடுபடவிரும்புவோர் இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணி நடக்கவேண்டுமெனவும் வரம்புமீறும் போது ஏற்படும் விபரீதங்களையிட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று (26) நோன்பு நோற்று வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்கு சமுகந்தரும் யாவரும் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு குறித்த செயலில் ஈடுபட்டோருக்கு உரியதை வழங்கவேண்டும் எனவும் நேர்வழி நாடி நிற்போருக்கு அதனை அல்லாஹ் வழங்கவேண்டுமெனவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 இல் 8:59 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இலங்கை முஸ்லிம்களை வழிநடத்துவது யார் ? அது ஜம்மியத்துல் உலமாவக இருந்தால் அது மக்களுடன் எந்த வழியில் தொடர்புகளை பேணுகிறது ? அதாவது அதன் கருத்துக்கள் எந்தவழியில் மக்களை அடைகிறது ? என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது . உண்மையில் ஜம்மியத்துல் உலமா தான் இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்கவேண்டும் என்பதில் கருத்து முரண்பாடு இல்லை .அது எந்த இயக்கத்தை சார்ந்தவர் என்பது பிரச்சினை இல்லை . இருந்தும் இந்த ஊடகம் மூலம் வரும் செய்திகள் தான் ஜம்மியத்துல் உலமாவின் கருத்துக்கள் என வரையறை செய்து மக்களுக்கு அறிவுரித்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

    முக்கியமாக இப்பொழுது கையடக்க தொலைபேசி பாவிக்கதவர் மிகக் குறைவு . எனவே ஜம்மியத்துல் உலமா ஒரு twitter சேவையை துவங்கி தனது தொடர்புகளை அதன் மூலம் வைத்துக்கொண்டால் எமக்கு வசதியாக இருக்கும்
    இது பற்றி ஜம்மியத்துல் உலமா கவனம் செலுத்துமா ?

    hassan mihilar

    ஏப்ரல் 26, 2012 at 8:09 முப


பின்னூட்டமொன்றை இடுக