Lankamuslim.org

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்

with 7 comments

இன்று -25-வெளியாகியுள்ள தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்பு செய்தியாக வெளிவந்த செய்தியை இங்கு தருகிறோம் :தமிழ்ச் சமூகம் தமது பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியதைப் போன்று தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும். ஆபத்தானதொரு கட்டத்தில் அரசாங்கம் இருப்பதை ஆட்சியிலுள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வெறும் பகடைக் காய்களாக முஸ்லிம்களைப் பயன்படுத்த எம்மால் ஒரு போதும் இடம் வழங்க முடியாது என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

காத்தான்குடி, பூநொச்சிமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு இணைந்தமையானது கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுந்தமைக்கு ஒப்பானதொரு செயலாகும் என்று அந்த இணைவு இடம்பெற்ற மறுநாளே கல்முனையில் வைத்துக் கூறியிருந்தேன். அதேவேளை இந்தக் குழியிலிருந்து வெளியே வரும் உபாயங்களும் எமக்குத் தெரியும் என்பதையும் நான் அப்போது சொல்லியிருந்தேன்.

தம்புள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட விவகாரங்கள் அரசாங்கத்துக்குள் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸினையும் முஸ்லிம் சமூகத்தினையும் பலவீனப்படுத்துகின்ற நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்த நிலையில் அரசுடனான தமது இணைவானது சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் மூலம்தான் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி தன்னுடைய உண்மையான அடையாளத்தைக் காட்ட வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எடுப்பார் கைப்பிள்ளையாக இயங்க முடியாது. அரசாங்கத்தின் தேவைக்கும் அவர்களை நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய நிலைப்பாட்டினை எடுக்க முடியாது.

தம்புள்ளயிலுள்ள பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்கிறதொரு நிலைப்பாடு அநியாயமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்பதை தம்புள்ளயிலுள்ள சிங்கள மக்களில் அதிகமானோரே எதிர்க்கின்றார்கள். நான் நேரடியாகச் சென்று பார்த்தபோது சிங்கள மக்களே இதை என்னிடம் கூறினார்கள். இப்படியிருக்கும் போது, பள்ளிவாசலை அகற்றுவதற்கு நாம் ஏன் உடன்படவேண்டும்?

மேலிடத்திலிருந்து சில விருப்பங்கள் தெரியப்படுத்தப்படும் போது அதற்கேற்றவாறு நாம் ஒரு பல்லவியை பாடுவதென்ற விடயம் முஸ்லிம் காங்கிரஸினால் முடியாது.

அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்தமையானது ஒற்றுமையாக கையாளப்பட்டிருந்தால் அது மிகச்சிறந்ததொரு இணைவாக மாறியிருக்கும். ஆனால் இன்னுமொரு பிளவினை இந்தக் கட்சி தாங்கிக் கொள்ளாது எனும் நிலையில்தான் நாம் அரசுடன் இணைந்தோம். ஆயினும் இந்த இணைவின் பின் ஒருவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த எவையும் கிடைக்கவில்லை.

நமது கட்சியிலுள்ள சிலருக்கு பதவிகள் சம்பந்தமான ஆசைகள் தொடர்ந்தும் இருந்து கொண்டே வருகிறது. இதற்காக கட்சிக்கு அப்பால் சென்று அரசாங்கத்துடன் தனிப்பட்ட உறவுகளைப் பேணி தமது அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு யாராவது முயன்றால் அவற்றினை முறியடிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் நிச்சயமாக வியூகங்களை வகுக்கும்.

அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்ததன் மூலமாக மூன்றில் இரண்டு எனும் பெரும்பான்மைகளில் உதவியது. அதன் மூலமாக தம்புள்ளயில் இன்று அரசாங்கம் நினைத்ததைச் செய்வதற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

எனினும் எமது பலம் முழுமையாக அற்றுப்போகவில்லை. தமது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் சமூகம் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியமை போன்று முஸ்லிம் சமூகத்தினாலும் முடியும். இந்த விடயத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்.
எதற்காகவும் நாங்கள் பயந்து ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுவது எனும் விவகாரத்திலுள்ள அநியாயம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் எம்மிடம் பேசுகிறார்கள். இதற்குப் பின்னரும் நாம் ஏன் பயந்து கொண்டிருக்க வேண்டும்.
ஜனாதிபதி எங்களை நம்ப வேண்டும். நாங்கள் நம்பும் படி அவரும் நடந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் ஒரு சகோதரர் முஸ்லிம் காங்கிரஸிடம் அபிவிருத்தி விடயத்தில் சீண்டுவதை தொடர்ந்தும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

ஆனால் நாங்களாக அரசாங்கத்தை விட்டு செல்ல மாட்டோம். எங்களுடைய பலம் என்னவென்று எனக்குத் தெரியும். இந்த அரசாங்கத்துக்குள் நாங்கள் விருப்பத்தோடு வந்தவர்களுமல்ல. அதேபோல் விருப்பத்தோடு போகிறவர்களாகவும் இருக்க மாட்டோம். நம்பிக்கையைக் கொடுத்தே நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்றார்.

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 இல் 9:07 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

    கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
    நாட்டத்தில் கொள்ளா ரடீ! – கிளியே!
    நாளில் மறப்பா ரடீ ……
    ……..
    நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
    தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
    சிறுமை யடைவா ரடீ!

    சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
    சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!
    செம்மை மறந்தா ரடீ!

    nawa

    ஏப்ரல் 25, 2012 at 12:09 பிப

    • சகோதரர் நவா -இத விட சிறப்பா இந்த கட்டுரைக்கு பதில் சொல்லமுடியாது-இவர்களில் எவருமே பதவி சுகத்த துறக்க கூடியவர்கள் இல்லை-முஸ்லிம்களின் சகல உரிமைகளும் பறிக்கப் பட்ட பின் ஒரு வேளை இவர்கள் பதவியை விட்டு வெளியேறலாம்-sorry வெளியேற்றப்படுவார்கள்

      abdul

      ஏப்ரல் 25, 2012 at 4:33 பிப

  2. NAALAI(26) NOANBU NOATKUMARUM, 27 FRIDAYJUMMA vin PIN DAMBULLA PALLI PIRATCHINAI THODARFAHA DUA SEYYUMARUM, JAMMIYATHUL ULAMA VEANDIKKOLHIRAZU.

    mjm.ziyaulhaq

    ஏப்ரல் 25, 2012 at 1:51 பிப

  3. “நாங்களாக அரசாங்கத்தை விட்டு செல்ல மாட்டோம். எங்களுடைய பலம் என்னவென்று எனக்குத் தெரியும். இந்த அரசாங்கத்துக்குள் நாங்கள் விருப்பத்தோடு வந்தவர்களுமல்ல. அதேபோல் விருப்பத்தோடு போகிறவர்களாகவும் இருக்க மாட்டோம்” Intha vekkankanda velai thevaya???

    nawa

    ஏப்ரல் 25, 2012 at 3:28 பிப

  4. சகோதரர் ரவூப் ரகீம் அவர்களே,

    தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் தங்களின் உரிமைக் குரலை மதிக்கிறோம்.

    சிங்கள மக்களுடன் பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களை, சமயோசிதமான முறையில் இணக்கம் காண்பதே நமது கடமை.

    அதை விட்டு விட்டு, தமிழ்த் தலைமைகள்போல் வீர வசனங்களை அள்ளி வீசுவதை முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள்.

    தமிழ்த் தலைமைகளுக்குப் பீடித்த பரம்பரை நோய் தங்களை அணுகுவதை நாம் விரும்பவில்லை.

    ஊடகங்களால் மாற்றின மக்கள் செய்யும் உசுப்பேற்றல், எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றல் போன்ற துரோகங்களை நாம் அசட்டை செய்து, பொறுப்புணர்வுடன் செயல்படுவதே சிறந்தது.

    திம்புவிலிருந்து ஜெனீவாவரை 30 வருடங்களாக நமது நாட்டை வெளிநாடுகளில் சீரழித்த பெருமை தமிழினத்தைச் சாரும். கண்ட பலன் ஒன்றும் இல்லை. இன்றுவரை ஓர் அங்குலம்கூட, அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

    தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதுபோல், நீங்களும் ஆகிவிடக்கூடாது என்று பிரார்த்திக்கிறோம்.

    தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி இணக்கத்தைக் காணுமாறு தங்களை வினயமாய் வேண்டுகிறேன்.

    அல்லாஹ் தங்களுக்கு அருள் பாலிப்பானாக!

    muslim

    ஏப்ரல் 25, 2012 at 6:33 பிப

    • @ Muslim.. well said.. don’t follow others – just follow your own sense and take correct decisions so we could find a peaceful solutioin to the problem..

      gaus

      ஏப்ரல் 25, 2012 at 10:07 பிப

  5. சகோதரர் நவா -இத விட சிறப்பா இந்த கட்டுரைக்கு பதில் சொல்லமுடியாது

    Thaiyib. A .Cader

    ஏப்ரல் 26, 2012 at 9:16 பிப


பின்னூட்டமொன்றை இடுக