Lankamuslim.org

பாரபட்சம் காட்டாதீர்கள்-ஏறாவூர்: காணி அபகரிப்பு

leave a comment »

சஹீட் அஹமட் : மட்டக்களப்பு மயிலம்பாவளிப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான தென்னங்காணிகளைப் பயன்படுத்துவதில் நிர்வாக ரீதியாக பல்வேறு தடைகளை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தடைகளை உடன் நீக்கி அம்மக்களின் காணி உரிமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என வேண்டுகோள் விடுத்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ULMN முபீன்

கடந்த 23ஃ04ஃ2012 அன்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்வேண்டுகோளை விடுத்தார். தொடர்ந்து இக்காணி தொடர்பாக விளக்கமளிக்கையில்.

1979ம் ஆண்டில் முன்னாள் ஐனாதிபதி ஜே .ஆர் ஐயவர்த்தன அவர்களால் ஏறாவூரைச் சேர்ந்த 21 முஸ்லிம்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் 21 ஏக்கர் காணிகள் தென்னை பயிர்ச்செய்கைக்கு என வழங்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக அவர்களால் அக்காணிகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போனது. தற்போது அக்காணிகளை பராமரிக்க அவர்கள் செல்லுகின்ற போது அதிகாரிகளால் பல்வேறு தடைகளை எதிர் நோக்குகின்றனர் அப்பகுதி காணி உத்தியோகத்தர், கிராம சேவையாளர் மக்களை தூண்டி விட்டு குழப்பத்ததை உருவாக முயற்சிக்கின்றனர். இத்தனைக்கும் இக்காணிக்குரிய முஸ்லிம்களிடம் சுவர்ண பூமி உறுதிகள் டைட்டில் இலக்கத்துடன் மற்றும் வரைபடங்களுடன் காணப்படுகின்றன. ஆனால் அதிகாரிகளோ இது உங்கள் காணி இல்லை என்று மிரட்டுகின்றனர். நில அளவையாளரைக் கொண்டு சென்று அளந்த போது மிகத் தெளிவாக காணியை அடையாளம் காண முடிகிறது. மக்கள் யாருமில்லாத காடாகக் காணப்படும் இம் முஸ்லிம்களுக்கு உத்தியோக பூர்வமாக அரசு கையளித்த காணிகளை பயன்படுத்த முடியாமல் பல தடைகளை அதிகாரிகள் இடுகின்றனர். ஏன் இந்த பாரபட்சம் காட்டுகின்றனர் எனக் கேள்வி எழுப்பிய மாகாணசபை உறுப்பினர் முபீன் முஸ்லிம்களின் காணி தொடர்பான தெளிவான ஆவண ஆதாரங்களை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்குமாகாணசபை முதலமைச்சர். சந்திரகாந்தன் மற்றும் அரசாங்க அதிபர் அருமைநாயகம் ஆகியோர்களிடம் கையளித்தார்.

இதன் போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அது தமிழ் மக்களின் காணி என்றார். முஸ்லிம்களிடம் தெளிவான உறுதி இருக்கும் போது எப்படி தமிழர்களின் காணியாக இது இருக்க முடியும் என முபீன் பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்து கேட்டார். அதன் போது இடைமறித்த மீள்குடியேற்ற பிரதிமைச்சர் முரளிதரன் (கருணா அம்மான்) முஸ்லிம்களின் காணி இரத்து செய்யப்பட்டு 19 தமிழர்களுக்கு அக்காணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். இதனை வன்மையாக மறுத்த முபீன் அரச காணிகள் வழங்கும் நடைமுறையை விளக்கப்படுத்தி பின்வருமாறு கூறினார்.

அரச காணிகள் வழங்கும் போது விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டு காணிக்கச்சேரி நடத்தப்பட்டு காணிகள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டே வழங்கப்படும். ஏற்கனவே வரைபடத்துடன், டைட்டில் இலக்கத்துடன் அதிமேதகு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட காணிக்கு மீண்டும் இன்னொரு உரிமையாளரை யார் நியமித்தார். அப்படியென்றால் மட்டக்களப்பு காணி நிர்வாகம் முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டுகிறதா? தயவு செய்து அதிகாரிகளே முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டாதீர்கள். நாங்கள் உங்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றோம். தமிழ்ர்களிடம் ஆவணங்கள் இருந்தால் இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்து உரியவர்களுக்கு காணிகளை கையளியுங்கள். இம் முஸ்லிம்களிடம் உள்ள காணி தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பதாக கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றார் உறுப்பினர் முபீன்.

நீண்ட விவாததத்தின் பின் இப்பிரச்சினையை மாவட்ட அபிவிருத்தி குழுவின் ஊடாக கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு சமர்ப்பித்து தீர்ப்பைப் பெற்றுக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது

Written by lankamuslim

ஏப்ரல் 25, 2012 இல் 4:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக