Lankamuslim.org

தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல் : பிரிட்டனில் எதிரொலி

leave a comment »

சோனகர்.கொம் என்ற வலைத்தளம் எமக்கு அனுப்பிவிதுள்ள செய்தி போருக்குப் பிந்திய இலங்கை கண்டு வரும் இனவாத வன்செயல்களின் தொடர்ச்சியாக இலங்கை, மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை பிரதேசத்தில் சுமார் 60 வருட காலம் பழமை வாய்ந்த மஸ்ஜித் (தொழுகைக்காக இஸ்லாமியர்கள் கூடும் இடம்) ஒன்று தாக்கப்பட்டதாகவும், இல்லை அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களே இடம்பெற்றன என்றும் பல்வேறு வகையான ஊகங்கள் மற்றும் திரிபடைந்த செய்திகள் வெளியான நிலையில், உலக அளவில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் என்றும் இல்லாத அளவிலான பதட்ட நிலை காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

எனினும், இச்செய்தி தொடர்பான முன்னுக்குப் பின் முரணாண ஊடக நிலைப்பாடுகளும், இது வரை அரசாங்க மேல் மட்டத்திலிருந்து தெளிவானதொரு நிலைப்பாடு தெரிவிக்கப்படாமையினாலும், இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தவிர்த்து, சமய விவகாரங்கள் மற்றும் வாழ்வியலில் ஆளுமை மிக்க மார்க்கத் தலைவர்களின் சம்மேளனமான ஜம் இயதுல் உலமா சபையினரும் உடனடியாகத் தலையிட்டு முஸ்லிம்களின் அமைதியை வேண்டி நிற்கின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்தில், நாடளாவிய ரீதியில் செயலாற்றும் ஏறத்தாழ அனைத்து இலங்கை இஸ்லாமிய மக்கள் சார்பான அமைப்புகளும் ஒன்றிணைந்து நேற்றைய தினம் (25-04-2012) பிரித்தானியாவிற்கான இலங்கை அரச பிரதிதி டாக்டர் க்ரிஸ் நோனிஸ் அவர்களை சந்தித்து தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஒரு குடையின் கீழ்

குறிப்பிட்ட சம்பவம், இலங்கை முஸ்லிம்களின் உணர்வலைகளை வெகுவாகப் பாதித்திருப்பதோடு மாத்திரமன்றி, பல்வேறு கிளைகளாக, நாடளாவிய ரீதியில் இயங்கிக் கொண்டிருந்த பல்வேறு அமைப்புகளை ஒரே குடையின் கீழ் அணி சேர்த்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இச்சம்பவம் தொடர்பான விடயங்களை மிக எச்சரிக்கையாகக் கையாள்வதும் அதே நேரம் இவ்வகைச் சம்பவங்களை எதிர்கொண்டு எமது உரிமைகளை நிலை நிறுத்திக்கொள்வதற்குமான நடவடிக்கைகளிலும் ஒன்றிணைந்து செயற்படும் இணக்கப்பாடும், அதேவேளை அரசியல் சாராத அமைப்பான ஜம்இயதுல் உலமாவின் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளுக்கு கை கொடுத்து, தோளோடு தோள் நிற்பதும் போன்ற கருத்துக்களில் உடனடி உடன்பாடு ஏற்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, பல்வேறு அமைப்புகளின் தனிப்பட்ட நிலைப்பாடு தவிர்க்கப்பட்டு, அனைத்து அமைப்புகளின் ஒன்றியமாக இலங்கை உயர்ஸ்தானிகருடனான சந்திப்பும் சுமுகமாக இடம்பெற்று, பொதுவான நிலைப்பாட்டு மனு கையளிக்கப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

நவீன ஊடகங்கள், கருத்து மேடைகள், சாதாரன மூலைக் கடைகள், உள் நாடு, வெளி நாடு என்று அனைத்து மட்டத்திலும் இன்று பெரும் பேச்சுப் பொருளாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் குறிப்பிட்ட தம்புள்ளை சம்பவம் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் அறியப்படாமலிருப்பதனால் வெளி நாடு வாழ் முஸ்லிம்களிடையே உண்மையில் நடந்தது என்ன? எனும் கேள்வியும் ஒருசேர எழுந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடகங்களில் வெளியான விபரங்கள் பெரும்பாலும் ஊகங்களுக்கும், உணர்ச்சியூட்டலுக்குமே வழி சமைத்திருக்கும் நிலையில் இது தொடர்பான மிக விரிவான தகவல்களை தொகுத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை சோனகர்.காம் வலைத்தளமும் மேற்கொண்டிருக்கிறது.

எமது விரிவான தகவல்களை மிக விரைவில் இங்கு வெளியிட இருக்கிறோம்.

இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அரச மட்டத்தில் பல்வேறு செய்திப் பரிமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் கருத்திற் கொண்டு, இன்றைய நிலையில் ஜம்இயதுல் உலமாவின் வேண்டுகொளுக்கிணங்க உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம்கள் யாவரும் அமைதி காப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாகும்.

எனினும், இலங்கை நாட்டில் இனத்துவேசம் மிக வேகமாகத் துளிர் விட்டுக்கொண்டிருக்கின்றது என்பது மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

கடந்த வருடம் (2011) செப்டம்பர் மாதம் அநுராதபுரத்தில் இதற்கான வெள்ளோட்டம் நடைபெற்ற போது, “அநுராத புரம் .. எதற்கான ஆரம்பம்? ” என்ற தலைப்பிட்டு எமது ஆதங்கம், விளக்கம், நேர்காணல்கள் மற்றும் கருத்துக்களையும் முன் வைத்திருந்தோம்.

அத்தருணத்தில் அநுராதபுர விடயம் ஒரு தற்செயலாகக் கணிக்கப்பட்டு , பெரும்பாலும் அலட்சியமாக நோக்கப்பட்டிருந்ததே தவிர, எதிர்காலத்தில் அதன் விளைவுகள் என்ன என்பது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் தொலை நோக்கப் பார்வை மிகக் குறைவாகவே இருந்து வந்திருந்தது.

அதற்கான காரணம், இலங்கை அரசு மீதான நம்பிக்கையா அல்லது கால காலமாகப் பேணப்பட்டு வரும் தம் உரிமைகள் எப்போதுமே மீறப்படமாட்டாது எனும் அலட்சியப்போக்கா? என்று கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.

எது எவ்வாறாக இருப்பினும், இன்றைய நிலையில் தம்புள்ளை விவகாரம் தொடர்பாக சர்வதேச ரீதியில் இலங்கை முஸ்லிம்களிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு பாராட்டத்தக்கதாகும், எல்லாம் வல்ல இறைவன் நாட்டத்தில் எதிர்கால செயற்பாடுகள் எமது பாரம்பரியத்தையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வண்ணம், அதே நேரம் எமது அரசியல் பங்களிப்பினை வலுப்படுத்தக்கூடியதாகவும் அமைத்துக்கொள்வது ஒவ்வொரு இலங்கை வாழ் இஸ்லாமியரின் தேவையாகவும் இருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

Written by lankamuslim

ஏப்ரல் 27, 2012 இல் 7:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக