Lankamuslim.org

தம்புள்ளை பள்ளிவாசல் இடமாற்றப்படக் கூடாது: காத்தான்குடி நகரசபை

with one comment

F.M.பர்ஹான்: தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை சில பேரினவாத பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரேரணையொன்று காத்தான்குடி நகர சபையின் விசேட கூட்டத்தின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர்களுக்கான 2012 ஏப்ரல் மாத விசேட கூட்டம் நகர சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் தலைமையில ;இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதன்போது தம்புள்ள பள்ளிவாயல் உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை காத்தான்குடி நகர சபை கண்டிக்க வேண்டுமெனும் பிரேரணை சபை உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டபோது இப்பிரேரணையை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

‘தம்புள்ள பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இப்பள்ளிவாயலை இடமாற்றக் கூடாது. இந்தப்பள்ளிவாயல் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதை வன்மையாக காத்தான்குடி நகர சபை கண்டிக்கின்றது’ என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இப்பிரேரணையை ஜனாதிபதிக்கு அனுப்புவது, மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தின் மீது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பது போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் தெரிவித்தார்.

இன்றைய விசேட அமர்வில் காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம், நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.சியாட், றவூப் ஏ மஜீட், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பு உறுப்பினர் அலி சப்ரி, மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எம்.எம்.அப்துர் றஹ்மான் ‘ நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் புதிய நியமனம் பெற்றுள்ள காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் யுடுஆ. ஸபீல் நளீமி ஆகியோர் இந்த விசேட அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த 26.4.2012 அன்று நடைபெற்ற காத்தான்குடி நகர சபையின் கூட்டத்தின் போது நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் எம்.எம்.அப்துர் றஹ்மானினால் தம்புள்ள பள்ளிவாயல் உடைப்புக்கெதிராக காத்தான்குடி நகர சபை கண்டனத்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட பிரேரணையானது உரிய முறையில் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்து நகர சபை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2012 இல் 4:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. கருணாநிதி இன் கண்டன அறிக்கையும் வந்தபின்புதான் காத்தான்குடி நகர சபை
    கண்டன பிரேரணை நிறைவேத்தி உள்ளது

    ahamed J

    மே 1, 2012 at 12:41 முப


பின்னூட்டமொன்றை இடுக