Lankamuslim.org

PMGG புதிய உறுப்பினர் சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுப்பு

leave a comment »

FM.பர்ஹான்: காத்தான்குடி நகர சபைக்கு PMGG சார்பாக புதிய நியமனம் பெற்றுள்ள உறுப்பினர் இம்மாத சபை அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியினை நகர சபை தவிசாளர் மறுத்துள்ளார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தி வரும் மீள்ழைத்தல் முறைமைக்கமைய அதன் சூறா சபை உறுப்பினர் அல்ஹாஜ் AGM . ஹாறூன் அவர்கள் தமது நகர சபை உறுப்பினர் பதவியினை கடந்த மாதம் இராஜினாமா செய்திருந்தார்.

இவருக்குப் பதிலாக PMGG யின்சூறா சபை உறுப்பினரும் அதன் முன்னாள் பொதுச் செயலாளருமான அஷ்ஷெய்க் ALM ஸபீல் நளீமி அவர்களை PMGG யின் சூறா சபை ஏகமனதாக நகர சபை உறுப்பினர் பதவிக்கு நியமித்திருந்தது.

நகர சபைக்கான புதிய உறுப்பினராக ஸபீல் நளீமி அவர்களை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் 2012.04.23ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் நியமித்து பிரகடனப்படுத்தியிருந்தார். இந்நியமனம் தொடர்பான மூலப் பிரதி உத்தியோகபூர்வமாக நகர சபை செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததுடன் தெரிவத்தாட்சி அலுவலர் ஸபீல் நளீமி அவர்களின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2012.04.24ம் திகதியன்று நகர சபை செயலாளரை தொடர்பு கொண்ட ஸபீல் நளீமி அவர்கள் தமது பதவியேற்பு தொடர்பாகவும் 2012.04.26ம் திகதி நடைபெறவிருந்த நகர சபை மாதாந்த அமவில் தாம் பங்கேற்பது தொடர்பாகவும் விசாரித்தபோது தெரிவத்தாட்சி அலுவலரின் கடிதம் கிடைக்கப்பெற்றதும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் நகர சபை செயலாளர் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து மறுநாள் 2012.04.25ம் திகதி நகர சபை செயலாளரைத் தொடர்பு கொண்ட போது தமக்கு கடிதம் கிடைக்கப்பெற்றமையை உறுதிப்படுத்தினார். அத்தோடு ஸபீல் நளீமி அவர்கள் இம்மாத கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய அனுமதியை வழங்குமாறும் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இருப்பினும் 2012.04.25ம் திகதி பிற்பகல் நகர சபை செயலாளரை மீண்டும் தொடர்பு கொண்ட போது மறுநாள் நடைபெறும் மாதாந்த அமர்வில் ஸபீல் நளீமி அவர்கள் கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாதென தவிசாளர் தமக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபற்றி தெரிவத்தாட்சி அலுவலர் அவர்களுக்கு PMGGயினால் உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெரிவத்தாட்சி அலுவலர் நகர சபை செயலாளரை தொடர்பு கொண்டு ஸபீல் நளீமி அவர்கள் ஏற்கனவே சட்டபூர்வமாக ஏப்ரல் 5ம் திகதி நியமிக்கப்;பட்டு விட்டதாகவும் எனவே இம்மாத கூட்ட அமர்வில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்

எனினும் சபை அமர்வு தினமான 26.04.2012ம் திகதி காலை 8.45 மணியளவில் ஸபீல் நளீமி அவர்கள் செயலாளரை சந்தித்து வினவியபோது தவிசாளர் புதிய உறுப்பினரை இம்மாத அமர்வுக்கு அனுமதிக்க வேண்டாமென கண்டிப்பாக கூறியிருப்பதாகவும் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியிருந்தார்.

தெரிவத்தாட்சி அலுவலர் ஸபீல் நளீமி அவர்களை சட்ட பூர்வமாக நகர சபை உறுப்பினராக பிரகடனப்படுத்தியிருந்தும் தவிசாளரின் எதேச்சதிகாரமான, சட்ட நிருவாக விடயங்களை மதிக்காததன் காரணமாக PMGGயின் புதிய உறுப்பினரான ஸபீல் நளீமி அவர்களினால் இம்மாத கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தமது சட்ட ரீதியான கடமையினைச் செய்யத் தவறிய நகர சபை செயலாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் PMGG தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2012 இல் 3:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக